சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதற்காக வரும் 23ஆம் தேதி ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9.05.2023) சென்னையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.1891 கோடி முதலீட்டில், 2000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் குளிர்சாதன இயந்திரங்கள் மற்றும் காற்றழுத்தக் கருவிகள் உற்பத்தி ஆலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் நிறுவப்படவுள்ள இந்த ஆலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், '' 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதற்காக வரும் 23ஆம் தேதி ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்குச் செல்ல இருக்கிறேன். இந்த நிலையில், மிக ஸ்மார்ட்டாக, முன்கூட்டியே, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தை வைத்து, இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்படும் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். தொழில் துறை நிகழ்ச்சிகள் என்பவை அந்தத் துறை நிகழ்ச்சிகளாக மட்டும் அமைவது இல்லை, இந்த மாநில வளர்ச்சியினுடைய நிகழ்ச்சிகளாகவும் அமைந்திருக்கின்றன.
மின்னணுவியல் துறையில், உலகளாவிய முன்னணி நிறுவனமான மிட்சுபிஷி எலக்ட்ரிக் நிறுவனத்தின் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் காற்றழுத்தக் கருவிகள் உற்பத்தித் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல், அதற்கான ஆலை அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டி வைத்து இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்திருக்கிறது.
புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு, அகில இந்திய அளவில் முன்னணி மாநிலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. அகில இந்திய அளவில் மட்டுமல்ல, தெற்காசிய அளவில், முதலீடுகளை ஈர்த்திட சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கிட வேண்டும் என்ற குறிக்கோளை அடைவதற்காக நாங்கள் அல்லும் பகலும் உழைத்து வருகிறோம். அதிலும், குறிப்பாக ஜப்பானிய முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. எண்ணற்ற ஜப்பானிய நிறுவனங்கள், தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்து, தங்கள் திட்டங்களை இங்கு நிறுவியுள்ளனர்.
ஜப்பான் - இந்தியா முதலீடு மேம்பாட்டுக் கூட்டாண்மை திட்டத்தின்கீழ், இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள 12 ஜப்பானிய தொழில்நுட்ப நகரியங்களில், 3 நகரியங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ்நாட்டில், அதிக அளவில் ஜப்பானியர்கள் வசித்து வருகின்றனர். இந்த உறவை மேலும் வலுப்படுத்திடும் வகையில்தான், இந்த மாத இறுதியில், முதலீட்டுக் குழுவுக்கு தலைமை தாங்கி, நான் ஜப்பான் செல்ல இருக்கிறேன்.
அங்கு முன்னணி தொழில் துறைத் தலைவர்களையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்து, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று, தமிழ்நாட்டில் முதலீடு மேற்கொள்ள வருமாறு நான் அழைப்புவிடுக்க இருக்கிறேன்.
இந்திய அளவில், இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
2030-ஆம் ஆண்டிற்குள், தமிழ்நாட்டை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றிட வேண்டும் என்று ஒரு உயரிய இலக்கை நான் நிர்ணயித்திருக்கிறேன். இந்த இலக்கை அடைவதற்கான அனைத்து முயற்சிகளையும், நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இந்தப் பாதையில் ஒரு மைல்கல்லாக, மிட்சுபிஷி நிறுவனத்தின் முதலீடு அமைந்திருப்பதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. இவ்வாறான முதலீடுகள், நாங்கள் அந்த இலக்கை அடைவதற்கு உந்துதல் அளிப்பதோடு, நேர்மறை விளைவுகளை ஏற்படுத்திடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
சாம்சங், ஃபாக்ஸ் கான், பெகட்ரான், வோல்டாஸ் போன்ற மின்னணுவியல் துறை சார்ந்த மிகப் பெரும் உற்பத்தியாளர்கள், தமிழ்நாட்டில் தங்கள் உற்பத்தி அமைப்புகளை நிறுவியுள்ளனர். இவற்றுள் பல நிறுவனங்கள் விரிவாக்கத் திட்டங்களையும் நிறுவியுள்ளன. இவ்வாறான நேர்மறைச் சூழ்நிலையில், மிட்சுபிஷி நிறுவனத்தின் இந்தத் திட்டம் இங்கு நிறுவப்படவுள்ளது. தமிழ்நாடு அடைந்திருக்கும் பல வெற்றிகளுக்கு மேலும் சிறப்பு சேர்ப்பது மட்டுமின்றி, தமிழ்நாட்டின் மின்னணு உற்பத்தி சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்திடும்'' எனத் தெரிவித்தார்.