பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கியுள்ள ஆங்கில பாடப் புத்தகத்தின் ஐந்தாவது பாடமான 'தி ஸ்டேட்டஸ் ஆஃப் தமிழ் அஸ் ஏ கிளாசிக்கல் லாங்குவேஜ்'-இல் (the status of tamil as a classical language)
- சீன மொழி - 1,250 ஆண்டுகள்,
- ஹூப்ரு மொழி - 1,000 ஆண்டுகள்,
- இலத்தீன் மொழி - 75 ஆண்டுகள்,
- அரபிக் மொழி - 512 ஆண்டுகள்,
- தமிழ்மொழி - 300 ஆண்டுகள்,
- கிரேக்க மொழி - 1500 ஆண்டுகள்,
- சமஸ்கிருத மொழி - 2,000 ஆண்டுகள் பழமையானவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி உலகிலேயே பழமையான தொன்மை வாய்ந்த மொழி சமஸ்கிருதம் என அமையும் வகையில் ஆண்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. தொன்மையும், பழமையும் வாய்ந்த தமிழ் மொழியை மாற்றிவிட்டு சமஸ்கிருத மொழி தொன்மையான மொழி என தவறாக அச்சிடப்பட்டுள்ளதற்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனைத் தொடர்ந்து பன்னிரெண்டாம் வகுப்பு ஆங்கிலப் பாடத்திட்டத்தை எழுதிய ஆசிரியர்கள் குழுவைச் சேர்ந்த 13 ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அவர்கள் இன்று அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில புத்தகத்தில் தற்போது ஆறு பாடங்கள் உள்ளன. அவற்றில் ஐந்தாவது பாடத்தில் உள்ள பக்கம் 145 முதல் 150 வரை முற்றிலுமாக நீக்குவதற்கும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும் இந்தப் பாடப்பகுதியானது இந்த ஆண்டு முழுவதும் நீக்கப்பட்ட விட்டு அவற்றில் உள்ள பிழைகள் திருத்தம் செய்யப்பட்டு அடுத்த ஆண்டு மீண்டும் புத்தகத்தில் கொண்டுவரப்படும்.