சென்னை: திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த மகேஷ் (45), மாதவரத்தில் தனக்கு சொந்தமாக இருக்கக்கூடிய இடத்தில் பிரச்னை இருப்பதாகக் கூறி, தனது தாய் மாமன் கண்ணனை காணச் சென்றுள்ளார்.
இந்நிலையில் கண்ணனின் வீட்டு பின்பகுதியில், காணாமல் போன தனது சகோதரன் ரமேஷ் தங்கி வந்த வீடு குப்பையாக இருப்பதைக் கண்டு சுத்தம் செய்துள்ளார். அப்போது அங்கு எலும்புக்கூடு ஒன்று இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
சொத்துப் பிரச்னை
இதனைத் தொடர்ந்து உடனடியாக மகேஷ் அமைந்தகரை காவல் நிலையத்திற்குச் சென்று இது குறித்து தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தினர்.
மகேஷின் சகோதரரான ரமேஷ் (49) தாய்மாமன் வீட்டின் பின்பகுதியில் நீண்ட ஆண்டுகளாக குடியிருந்து வந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ரமேஷிற்கு திருமணம் ஆகவில்லை.
3,600 சதுர அடி கொண்ட இந்த வீட்டை ரமேஷின் தாத்தா, தாய் மாமனான கண்ணனுக்கு எழுதி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இந்த இடம் தொடர்பாக கண்ணனுக்கும் ரமேஷுக்கும் இடையே நீண்ட ஆண்டுகளாக பிரச்னை நிலவி வந்தது.
கொன்றது தாய்மாமனா?
இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. கடந்த 2017ஆம் ஆண்டு கண்ணனுக்கு இந்த வீடு சொந்தமானது என நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது. எனினும் தொடர்ந்து ரமேஷ் பின்பகுதியில் உள்ள வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்த இடம் தொடர்பாக இருவருக்கும் பிரச்சனை தொடர்ந்து நடந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ரமேஷ் நீண்ட நாள்களாக வீட்டிற்கு வரவில்லை என தாய்மாமனான கண்ணன், மகேஷிடம் தெரிவித்துள்ளார். அப்போது காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல், மகேஷ் பல இடங்களில் ரமேஷை தேடி வந்த நிலையில் அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில் ரமேஷ், தாய்மாமன் கண்ணன் வீட்டிலேயே எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டது அனைவரிடத்தும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், பறிமுதல் செய்த எலும்புக்கூட்டை தடயவியல் நிபுணகளுக்கு அனுப்பி ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சொத்து பிரச்னைக்காக தாய்மாமனே ரமேஷை கொலை செய்தாரா அல்லது வேறு நபரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பெண்களை பாலியல் வன்புணர்வு செய்யும் பிரபல கொள்ளையன் கைது