சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் பங்கேற்றனர். கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர்களுடன் மட்டும் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''இல்லத்தரசிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம் உட்பட தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் குறித்து பொதுவெளியில் அனுபவம் வாய்ந்த அமைச்சர்கள் விமர்சனத்திற்கு உள்ளாகும் வகையில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு விமர்சனத்திற்கு உள்ளாகும் வகையில் பேசுவதால் அவர்களின் பேச்சு குறித்து அடிக்கடி ஊடகங்கள், சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்கள் வருத்தம் அளிக்கிறது'' எனத் தெரிவித்துள்ளார்.
விமர்சனத்திற்கு உள்ளாகும் வகையில் பேசுவதை மூத்த அமைச்சர்கள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என தெரிவித்த முதலமைச்சர், ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தியும் மூத்த அமைச்சர்கள் சிலர் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகும் வகையில் பேசி வருகின்றனர் எனவும்; இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும் கண்டித்துள்ளார்.
விழுப்புரத்தில் நேற்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ''எவ இவ'', ''சொல்றத கேளு'' என கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள் குறைகளை கூறியபோது அவர்களை, அமைச்சர் பொன்முடி இழிவாக ஒருமையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்னதாக கடந்த வருடம் ஒரு பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பெண்கள் இலவசப்பேருந்து திட்டம் பற்றி ''பெண்கள் எங்கே போனாலும் ஒசி தான்'' எனக் கூறியதும் சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், தற்போதைய பிற்படுத்தப்பட்டோர் அமைச்சர் ராஜ கண்ணப்பன், பட்டியலின மக்களைத் தரக்குறைவாகப் பேசியதால், துறை மாற்ற நடவடிக்கைக்கு உள்ளானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அண்ணாமலை மீது வருகின்ற 8ஆம் தேதி கிரிமினல் வழக்குத்தொடர்வேன்… டி.ஆர்.பாலு எம்.பி. பரபரப்பு பேட்டி!