சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தினர்.
அதன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் , ”சென்னை கோயம்புத்தூர் உள்ளிட்ட நான்கு விமான நிலையங்களிலும் 7841 பயணிகளுக்கு பரிசோதனை செய்தோம். அவர்களில் சீனா, பாதிப்படைந்த பிற நாடுகளில் இருந்து 1150 பயணிகள் வந்துள்ளனர். அவர்களை பொது சுகாதாரத்துறை தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 10 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களில் எட்டு பேர் சீனா நாட்டைச் சேர்ந்தவர்கள். மற்ற இருவரில் ஒருவர் ஹூகான் மாகாணத்திலிருந்து கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள மாணவியுடன் வந்தவர். ஆனால் இவர்கள் யாருக்கும் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இல்லை.
தமிழ்நாட்டில் சீனாவிலிருந்து வந்த 13 பேர் அனுமதிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர். அதில் 12 பேருக்கு ரத்த பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்புகளை எந்த அறிகுறியும் இல்லை. சீனா, பாதிப்புள்ள நாட்டிலிருந்து வந்தவர்களை தொடர் கண்காணிப்பில் வைத்து கண்காணித்து வருகிறோம். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், சளி இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லையென உறுதியான சீன நாட்டை சார்ந்தவர்களை மீண்டும் அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்புவது குறித்து மத்திய அரசிடம் பேச உள்ளோம். சீனாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய மாணவர்கள் மத்திய அரசால் அழைத்துவரப்பட்டு டெல்லியில் உள்ளனர். அவர்களை பரிசோதனை செய்த பின்னர் தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவது குறித்தும் பேசி வருகிறோம்.
பள்ளிக்கல்வித் துறை உயர்கல்வித் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினோம். பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துக் கூற வேண்டும் என தெரிவித்து உள்ளோம்” என கூறினார்.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ் பாதிப்பு: சீனாவிலிருந்து நாடு திரும்பிய மாணவி மருத்துவமனையில் அனுமதி!