சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நீரிழிவு, கால் புண் நோய்கள் நேரலை அரங்கம் மற்றும் தொடர் மருத்துவ கல்லூரி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது, வலது கால் புண் நோயால் பாதிக்கப்பட்டு ஒரு கால் இழந்தவருக்கு செயற்கை கால் பொருத்தி நடக்க செய்தனர். இந்தியாவில் 6.6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் உள்ளதாக புள்ளி விவரங்கள் உள்ளது. ஐந்து விநாடிக்கு ஒருவருக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதை தடுக்க நமது வாழ்வியல் முறைகளை மாற்றினால் 70 சதவீதம் சர்க்கரை நோய்களை தவிர்க்கலாம் என்று தெரிவித்தார்.
சக்கரை நோய் வந்த பிறகு அந்த விரல்களை இழக்காமல் கால்களை இழக்காமல் இருப்பதற்கு இந்த துறை புதிய முயற்சி எடுத்துள்ளது.ஸ்டான்லி மருத்துவமனையில் விரைவில் சர்க்கரை நோய்க்கு தனிப்பட்ட பரிசோதனை மையம் தொடங்கப்படும். சர்க்கரை நோய்க்கென முழு பரிசோதனை மையம் திறக்கப்படும் என்று கூறியுள்ளார்.
வரும் காலங்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், மாவட்ட மருத்துவமனைகளிலும் சர்க்கரை நோய்க்கு என தனிப்பட்ட பரிசோதனை மையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.உலக வங்கி தமிழக மருத்துவ நல்வாழ்வு துறைக்கு, மத்திய சுகாதாரத் துறை முன்னிலையில் இரண்டாயிரத்து 645 கோடி வழங்க உள்ளது. இந்த நிதி சுகாதாரத் துறையை மேலும் வளர்ச்சி பெற உதவியாக இருக்கும். 2019 ஆம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து தமிழகத்தில் ஒரே தவணையில் வழங்கப்படும் என்று கூறினார்.