சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மானியக் கோரியக்கையின் மீது பதிலுரை வழங்கி பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ”ஆண்டுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டுமென்ற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவை நனவாக்க முதலமைச்சர் ஒரே ஆண்டிலே 11 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதலைப் பெற்று ஒரு மகத்தான வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறார்.
இந்த 11 மருத்துவக் கல்லூரிகள் மூலம் இந்திய வரலாற்றிலேயே யாரும் செய்யாத அளவிற்கு ஒரே ஆண்டிலே 1,650 எம்.பி.பி.எஸ். இடங்களை உருவாக்கி, ஏழை, எளிய தமிழ்நாட்டு மாணவர்கள் பயன்பெறக்கூடிய வாய்ப்பை உருவாக்கியிருக்கிறார். ஏற்கெனவே 33,124 பேர் உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர், மருத்துவம் சார்ந்த மற்றும் சாரா பணியாளர்கள் என பணி நியமனங்களை தொடர்ந்து செய்திருக்கிறார் .
கரோனா தடுப்பு நடவடிக்கைகளிலே மத்திய அரசு கரோனா வைரஸ் தொற்றை ஒரு பேரிடராக அறிவித்துள்ள இந்தப் பதற்றமான சூழ்நிலையில் கூட முதலமைச்சர் தாயுள்ளத்தோடு கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அனைத்து நடவடிக்கைகளையும் ஒவ்வொரு நாளும் உற்றுநோக்கி, அதை நடைமுறைப்படுத்தி வருகிறார் .
கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முதலமைச்சர், அமைச்சர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்ட அரசு அலுவலர்களோடு கலந்தாலோசித்து, புதிய அறிவிப்புகளையும் உத்தரவுகளையும் ஒட்டுமொத்த தமிழினத்திற்கே இந்த நோய்த்தொற்று வந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார்.
அதற்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். அதை உணர்ந்த காரணத்தினால்தான் இந்த 144 போன்ற தடை உத்தரவுகள். இது அரசினுடைய உத்தரவு. ஏற்றுத்தான் ஆகவேண்டும். காவல் துறை உங்களைக் கண்காணிக்கும். நீங்கள் வெளியில் வரக்கூடாது. 28 நாள்கள் வீட்டிலிருந்தே ஆகவேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் அரசு தெளிவாக இருக்கிறது” என்றார்.