சென்னையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் குடிநீர் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், அமைச்சர் வேலுமணி தலைமையில் நடைபெற்றது. அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் வேலுமணி, சென்னையில் தண்ணீர் பஞ்சம் இருப்பதாக ஊடகங்களில் தவறான செய்திகள் பரப்பப்படுகிறது. ஹோட்டல்கள் மூடப்படுவதாக கூறுவதும் தவறான ஒன்று.
இயற்கையால் ஏற்பட்டுள்ள பாதிப்பினை சரிசெய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மண்டலங்களில் கண்காணிப்பு பொறியாளர், 200 வார்டுகளில் குடிநீர் விநியோகம் குறித்து கண்காணிக்க அலுவலர்கள் செயல்பட வேண்டும். மெத்தனம் காட்டும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இருபத்தி நான்கு மணிநேரமும் குடிநீர் விநியோகம் குறித்து கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
குடிநீர் பணிகளைக் கண்காணிக்க செயலி உருவாக்கி செயல்பட வேண்டும். செயலிகளில் வரும் புகார்கள் குறித்து உடனடியாக அலுவலர்கள் பொதுமக்களுக்கு பதிலளிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீரை குடிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தக் கூடாது. இச்செயல்பாடுகளுக்கு பத்திரிக்கை ஊடக நண்பர்கள் உதவ வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.