சென்னை: வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் சார்பில், சென்னையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்திற்கு கருத்துக்கணிப்பு இன்று (செப்.18) துவங்கியது.
இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் அமைச்சர் உதயநிதி அங்கிருந்த பொதுமக்களிடம் கருத்து கணிப்புக்கான துண்டு பிரச்சாரம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி கூறுகையில், “மக்களின் பயண நேரத்தையும், செலவையும் குறைக்கும் விதமாகவும் மற்றும் வேகமான பொது போக்குவரத்தை வடிவமைக்கவும், பாதுகாப்பான சாலைகளை வடிவமைக்கவும், பொது மக்களின் பயண முறை மற்றும் எதிர்பார்ப்புகளை புரிந்துக் கொள்ளவும், சிறந்த போக்குவரத்து வலையமைப்பை உருவாக்கவும் மற்றும் அனைவருக்கும் ஏற்ற போக்குவரத்தை திட்டமிடவும் இக்கருத்துக்கணிப்பு உதவியாக இருக்கும்.
மேலும் பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மூலமாக காட்சிகளை பதிவு செய்து, அதன் மூலம் கருத்துக்கணிப்பையும் மேற்கொள்கிறார்கள். எனவே, அடுத்து வரும் 25 ஆண்டு கால சென்னையின் பொது போக்குவரத்தை திட்டமிட, இந்த கருத்துக்கணிப்பு நடைபெற உள்ளது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவு; கடையநல்லூர் அருகே இளைஞர் மீது தாக்குதல்!
மேலும் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த கருத்துக்கு, கட்சி விவகாரத்தில் தான் தலையிட விரும்பவில்லை எனக் கூறினார். மேலும், சனாதனத்தை எதிர்க்க தொடர்ந்து குரல் கொடுப்பதாகவும், சமத்துவம் வேண்டி திமுக தொடர்ந்து பாடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “சாதியை ஒழிக்கதான் நாங்கள் போராடி வருகிறோம். பிறப்பால் அனைவரும் சமம் என்பதை அனைவருக்கும் உணர்த்த வேண்டும் என்றால், அதற்கு சனாதனம் ஒழிக்கபட வேண்டும். தமிழகத்தில் மட்டுமல்ல, சாதிய தீண்டாமை எங்கிருந்தாலும் அது தவறு தான்.
மேலும், அடுத்த 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டத்தை உருவாக்கும் வகையில், பொதுமக்கள் தயக்கம் காட்டாது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்” எனவும் தெரிவித்தார். மேலும் கேட்கப்பட்டுள்ள 40 கேள்விகளுக்கு, பொதுமக்கள் அளிக்கக்கூடிய பதிலை பொறுத்து தான், அடுத்த 25 ஆண்டுகளில் போக்குவரத்து கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இல்லை.. அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை!