சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நேற்று சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இம்முகாமில் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட 1,425 பேருக்கு பணி நியமன ஆணைகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர், "மாணவர்களுக்கு துறை சார்ந்த திறன் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டுமென்ற நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சரால் துவங்கி வைக்கப்பட்ட மாபெரும் திறன் மேம்பாட்டிற்கான திட்டம் ’நான் முதல்வன்' திட்டம். இத்திட்டத்தின் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு நவீன பாடப்பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கி அவர்களுக்குத் தகுதியான வேலைவாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற தொலைநோக்குடன் துவங்கப்பட்ட ஓராண்டிலேயே பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் 13 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து நான் முதல்வன் திட்டம் சாதனை புரிந்துள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் துவங்கப்பட்ட இத்திட்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக், அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் என உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கான வேலைவாய்ப்புடன் கூடிய சிறந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அந்தந்த கல்லூரி வளாகங்களிலேயே வழங்கி வருகிறது.
இத்தகைய திறன் பயிற்சி பெற்ற மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறும் நோக்கில் பொறியியல் கல்லூரிகளில் இதுவரை நடைபெற்ற வளாக வேலைவாய்ப்பு முகாம்களில் 64,943 மாணவர்கள் பணிவாய்ப்பு பெற்றுள்ளனர் என்பதையும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 78,196 மாணவர்கள் பணிவாய்ப்பு பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து இம்மாதம் இறுதிவரை இதுபோன்ற முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த வேலைவாய்ப்பு முகாமில் செயின்ட் கோபின், மைக்ரோ சாப்ட் , மிஸ்டர் கூப்பர் , டெக் மகேந்திரா , ஆதித்யா பிர்லா , பைஜீஸ், பிளிப்காட் , ஹெச்டி எப். சி., ஐசிஐசிஐ, இந்தியா சிமென்ட்ஸ், பாக்ஸ் கான் முத்தூட் பைனான்ஸ் , சுதர்லேன்ட் , ஸ்டார் ஹெல்த் போன்ற முன்னணி நிறுவனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 1425 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது" எனக் கூறினார்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.
இதையும் படிங்க: சேலம் சின்னப்பம்பட்டியில் 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' - ஜூன் 23ம் தேதி திறப்பு!