சென்னை: சென்னை ஐஐடியின் ஆராய்ச்சி பூங்கா இந்தியா எனர்ஜி ஸ்டோரேஜ் அலையன்ஸ் உடன் இணைந்து 'என்விஷன்' என்ற தலைப்பில், இந்தியாவின் முதல் எரிசக்தி திருவிழாவை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியின்போது அமைச்சர் பேசியதாவது, “கடலுக்குள் காற்றாலை அமைத்து மின்சாரம் தயாரிக்க மத்திய அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது. அதனை தமிழ்நாடு அரசும் வரவேற்கிறது. ஆனால், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்போது தென் தமிழ்நாட்டில் பவளப்பாறைகள் பாதிக்காமல் இருக்க மாற்று வழியைக் கண்டறிவதோடு, மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் செயல்பட வேண்டும்.
இயற்க்கை பேரிடர்களைச் சமாளிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம், அதற்கு தீர்வாக நீடித்த ஆற்றல் முறைகளுக்கு மாற வேண்டியது காலத்தின் அவசியம். அதனை பின்பற்றிதான் தமிழ்நாடு அரசு பங்களிப்போடு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் இருந்து காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவின் தலைவர் அசோக் ஜுன்ஜுன்வாலா, "சென்னையில் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி ஏற்பட்ட புயல் மற்றும் தென் தமிழ்நாட்டில் டிசம்பர் 17ஆம் தேதி ஏற்பட்ட புயல் பூமி அழிவை நோக்கி செல்வதையே சுட்டிக் காட்டுகிறது. தனிமனித அடிப்படையில், கிரீன்ஹவுஸ் வாயுக்கள் (GHG Emissions) குறைவாக இருந்தாலும், ஓட்டுமொத்த நாட்டின் கணக்கீட்டில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. வளரும் பொருளாதாரத்தில், இந்த எண்ணிக்கை அதிகரித்து கொண்டேதான் இருக்கும்.
இதனை நாம் குறைத்தாக வேண்டும். பருவநிலை மாற்றம் நிகழ்வினால் இந்தியா போன்ற நாடுகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களே பாதிக்கப்படுகின்றனர். புதைபடிவமற்ற ஆற்றலை (Fossil Free Energy) நோக்கி, நாம் அவசரமாக நகர வேண்டும். அதற்கு சிறந்த வழி பசுமை ஆற்றலை (Green Energy) பொருளாதார ரீதியில் அடைக்கக்கூடிய அளவிற்கு மாற்றுவதுதான். இது ஏற்கனவே நடந்துகொண்டு இருக்கிறது, ஆனால் இன்னும் தேவைப்படுகின்றது.
ஒன்று சூரிய சக்தி தொழில்நுட்பத்தில், மற்றொன்று சிறிய அளவிலான அணுசக்தி உற்பத்தி தொழில்நுட்பம், மூன்றாவதாக கருத்து பரிமாற்ற அரங்கம். கிரீன்ஹவுஸ் வாயுக்கள் (GHG Emissions) அதிகம் வெளியேற்றப்படும் வெப்பமூட்டும் மற்றும் குளிரூட்டும் பயன்பாடுகள் உள்ள தொழில்நுட்பத்தில் மற்றும் நான்காவது கருத்து பரிமாற்ற அரங்கம் CSIR ஆய்வகங்களை மையமாகக் கொண்டு, ஆய்வகங்களில் இருந்து சந்தை வரை (Lab to Market) என்ற தலைப்பில் நடைபெறும்.
அடுத்த மூன்று நாட்களில் கருத்து பரிமாற்றம் மூலம், புதிய உறவுகளை உருவாக்குவதன் மூலவமாகவும், Envision கருத்தரங்கம் இந்தியாவின் தூய்மை சக்தி நோக்கிய பயணத்தை விரைவுபடுத்தும் என முழுமையமாக நம்புகிறேன்" என்று கூறினார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டிஆர்பி ராஜா, "இந்தியாவிற்குள் வரும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், முதலில் தட்டுவது தமிழகத்தின் கதவைத்தான். 'என்விசன்' என்ற பெயரில் இந்தியாவின் முதன்மை எரிசக்தி மாநாடு இன்று (ஜன.4) தொடங்கி வைக்கப்பட்டது.
நீடித்த ஆற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடியதாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு இருக்கும். அனைவருக்கும் அனைத்தும் என்ற பரவலாக்கப்பட்ட முதலமைச்சரின் முயற்சிக்கு, பெரும் உந்துதலாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு அமையும். ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பெரிய பாதிப்பு இல்லை. சில நிறுவனங்கள் தவிர்த்து, ஜப்பானிலிருக்கும் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்கும்.
மழை பாதிப்புக்கு தமிழ்நாடு கேட்ட நிதியை, மத்திய அரசு ஒதுக்கவில்லை. திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் வெள்ள நிவாரணம் குறித்து பிரதமர் அறிவிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், எந்த அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை. எனவே டெல்லியில் பிரதமரை சந்திக்க உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (தற்போது சந்தித்துவிட்டார்) வெள்ள பாதிப்புக்கான நிதி குறித்து நேரில் வலியுறுத்துவார்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா தொற்று பாதிப்பால் மாரடைப்புகள் ஏற்படுகிறதா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்!