சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் நேற்று (மார்ச் 1) மாநிலம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில், முதலமைச்சரின் பிறந்தநாளான நேற்று பிறந்த 14 குழந்தைகளுக்கும், இன்று (மார்ச் 2) குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தங்க மோதிரம் அணிவித்தார். அதேபோல் மேலும் 30 குழந்தைககளுக்கு பரிசு பெட்டகமும் வழங்கினார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், ''திமுக இயக்கத்திற்கு 55 ஆண்டுகள் காலமாக தியாகத்துடன் உழைத்தவர்தான், முதலமைச்சர் ஸ்டாலின். மாவட்டம் முழுவதும் இந்த மாதம் முழுவதும் நலத்திட்ட உதவிகளுடன் முதலமைச்சரின் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி என்பது ஏற்கனவே கணிக்கப்பட்டது. மக்கள் அளித்த வரவேற்பும், திமுக ஆட்சியின் சாதனையும்தான் வெற்றிக்கு காரணம்” என்றார்.
நடைபெற்று வரும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி, தபால் வாக்குகளுடன் சேர்த்து 13 சுற்றுகளில் மொத்தமாக எண்ணப்பட்ட வாக்குகளில் திமுக - காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 97,729 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் 38,790 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து 3வதாக நாம் தமிழர் கட்சியும், 4வதாக தேமுதிகவும் முன்னிலை வகிக்கின்றன. மேலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ‘திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி’ -முதலமைச்சர் பூரிப்பு