பவானிசாகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். ஈஸ்வரன் சட்டப்பேரவையில் இன்று பேசுகையில், “பவானிசாகர் பகுதி, தாளவாடி வட்டம், குத்தியாலத்தூர் ஊராட்சி, அணைக்கரை வழியாக புதிய மின் பாதை அமைக்க அரசு முன் வருமா? ஏனெனில் முறையான மின்சாரம் கிடைக்கப் பெறாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்” என்றார்.
இதற்கு பதில் அளித்த மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, “ஏற்கனவே அங்கு மின் இணைப்புகள் இருக்கின்றன. அங்கு மக்களுக்கு மின்சாரம் முறையாகக் கிடைத்து வருகிறது. சட்டப்பேரவை உறுப்பினர் தவறாகக் கூறுகிறார்” என்று கூறினார்.
அப்போது உறுப்பினர் ஈஸ்வரன் பேசுகையில், “அந்த பகுதி மக்களுக்கு மிகவும் தொலைவில் இருந்து மின் பாதை அமைத்து உள்ளனர். ஆனால் அது வனப்பகுதி என்பதால் அடிக்கடி இயற்கை சீற்றத்தால் மின் துண்டிப்பு ஏற்படுகிறது. எனவே புதிய மின் பாதை அமைக்க வேண்டும்” என்று கூறினார்.
இதையடுத்து, வனத்துறை மற்றும் நீதிமன்றத்தில் முறைப்படி அனுமதி பெற்று, ஆய்வு செய்து இதுகுறித்து முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் தங்கமணி உறுதியளித்தார்.