கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, நாட்டுமக்கள் அனைவரும் இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு அகல்விளக்கு, மெழுகுவர்த்தி அகியவற்றை ஏற்றுமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமரின் இக்கோரிக்கையை ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் மின் விளக்குகளை அணைத்து, மீண்டும் இயக்குவதால் பல இடங்களில் மின் வழித்தடங்கள் பாதிப்புக்குள்ளாகி, மின் விநியோகம் தடைப்பட்டு, மின் வெட்டும் ஏற்படும் என நிபுணர்கள் கூறிவருகின்றனர்.
இதுதொடர்பாக, சென்னை அண்ணா சாலையிலுள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மின்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது, "பிரதமர் மின் விளக்குகளை மட்டுமே அணைக்கக் கோரி உள்ளதால், பொதுமக்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு மற்ற மின் சாதனங்களை இயக்கலாம்.
இதனால், 1,500 மெகாவாட் அளவுக்கு மின்சாரப் பயன்பாடு குறையும். இதற்காக மின் உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்துள்ளோம். மருத்துவமனைகள், அரசு அனுமதித்த தொழிற்சாலைகளுக்கு வழக்கம் போல் மின்சாரம் கிடைக்கும்.
வீட்டில் உள்ள மின் சாதனங்கள் வெடிக்கும், என பொதுமக்கள் பயப்பட வேண்டாம். இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஏதாவது இடத்தில் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டால், அதனை சரி செய்ய அலுவலர்களும், பணியாளர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் ” என்றார்.
இதையும் படிங்க...தமிழ்நாட்டில் கரோனாவுக்கு மேலும் இருவர் உயிரிழப்பு!