சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் இன்று (ஜூன் 22) கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. அங்கு, ஆளுநர் உரையின் விவாதத்தின்போது மனித நேய மக்கள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஜவாஹிருல்லா ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களுக்கு அரசு அனுமதி அளிக்கக்கூடாது என வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “ஓஎன்ஜிசி நிர்வாகம் அரியலூரில் 10 எண்ணெய் கிணறுகளும், கடலூரில் ஐந்து எண்ணெய் கிணறுகளும் அமைப்பதற்கு ஒன்றிய அரசிடம் விண்ணப்பித்தது. அந்த விண்ணப்பத்திற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து நேற்றே (ஜூன் 21) நிராகரித்தது.
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் ஆகிய பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதியில்லை. இந்த மாவட்டங்களுக்கு வெளியே எண்ணெய் உற்பத்தி எடுக்க விண்ணப்பித்தால், அதன் பாதிப்புகளை கண்டறிய வல்லுநர் குழு அமைக்கப்படும். அந்த குழு பொதுமக்களின் கருத்துகளை கேட்டு அரசுக்கு அறிக்கை அளிக்கும். தமிழ்நாட்டில் மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்க ஒருபோதும் அனுமதியளிக்கப்படாது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா தொற்று விரைவில் முடிவுக்கு வரும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்