முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிப்பது விதிமீறல் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஜெயக்குமாரின் விமர்சனத்துக்கு பதிலளித்துள்ளார்.
அதில், “கோடநாடு விவகாரத்தில் ஜெயக்குமாரின் பேட்டி முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருக்கிறது. கோடநாடு விஷயத்தை சட்டப்பேரவையில் முதல்முறையாக கொண்டுவந்தது அதிமுகதான்.
அவசர விஷயம்தான்
ஆனால், சட்டப்பேரவையில் விவாதிக்க முடியாது என்று இப்போது சொல்கிறார்கள். கோடநாடு விவகாரத்தை அவசர விஷயமில்லை என்கிறார்கள். அங்கு சாதாரண சம்பவம் நடக்கவில்லை. கொலை நடந்திருக்கிறது.
ஜெயக்குமாருக்கு வேண்டுமானால் இது அவசர விஷயமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், சாதாரண அதிமுக தொண்டர்கள் அங்கு என்ன நடந்தது என்பதை அறிய விருப்பமாக இருக்கிறார்கள்.
கோடநாட்டில் தலைமை செயலகம்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மனதுக்கு உகந்த இடம் கோடநாடு. அங்கு ஒரு தலைமை செயலகமே செயல்பட்டிருக்கிறது.
முதலமைச்சர் சட்டத்தை பற்றி பேசக்கூடாது என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சரே சொல்வது வேடிக்கையான ஒன்று. இது மறு விசாரணை இல்லை. மேலதிக விசாரணை. யார் மீதும் காழ்ப்புணர்ச்சி இல்லை” என்றார்.