சென்னை: தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத் தொடரில் இன்று (மார்ச் 24) நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டியது குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "தமிழ்நாட்டின் பெருமளவில் மின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் உள்ளது.
அதன் கையிறுப்பில் இருக்கக் கூடிய நிலங்கள் மொத்த மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு முழுமையான அளவில் இல்லாத காரணத்தால், பற்றாக்குறை காணப்படுகிறது. புதிதாக நிலங்களை எடுக்கக்கூடிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதற்காக விவசாயிகள், நில உரிமையாளர்களிடம், நிலம் கையகப்படுத்தல் குறித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி கடந்த 6ஆம் தேதி வரை பல்வேறு கால கட்டத்தில், பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
வேளாண் துறை அமைச்சரும் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சரும் பல்வேறு காலட்டத்தில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். நில உரிமையாளர்களின் கோரிக்கையை என்பது நான்காக பிரிக்க முடிகிறது. நிலங்களை ஒப்படைப்பு செய்வோருக்கு, நிலங்களுக்கு மாற்றாக அவர்களுக்கு நிரந்தரமான வேலை வாய்ப்பு, அங்கு சங்கம் அமைத்து அதன் மூலம் வேலை வாய்ப்பு, உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை வழங்குவது, அவர்களுக்கு மறுவாழ்வு பலன்களை வழங்குவது என்பது கோரிக்கைகளாக உள்ளன.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் நிர்வாகத்தை பொறுத்தவரை 1,711 காலி பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது குறித்து என்எஸ்சி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நிலங்களை வழங்கியவருக்கு, இந்த காலிப் பணியிடங்களில் முன்னுரிமை வழங்கப்படும். 20 மதிப்பெண் கூடுதலாக வழங்கப்பட்டு அவர்களுக்கு தேர்வில் முன்னுரிமை வழங்கப்படும். இதோடு சங்கத்தின் மூலம் பணியாளர்களை நியமிப்பது குறித்தும் என்எல்சி ஒப்புதல் வழங்கி உள்ளது.
உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை என்பது ரூ.23 லட்சமாக இருந்தது, பேச்சுவார்த்தைக்குப் பின்பு ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டு வழங்கப்பட உள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதனை தனிப்பட்ட கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளார். விவசாயிகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்படுத்தாமல் உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். வேலைவாய்ப்பை உறுதி செய்வது, மறு குடி அமர்வு பணிகளை அளிப்பது அதை தாண்டியும் இருக்கக்கூடிய வேலைவாய்ப்புகளை அவர்களுக்கு உருவாக்கி தருவது என்பதை குறித்து அவர் நேரடி கவனத்தில் வைத்துள்ளார்.
இது குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சருக்கு உரிய ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி உள்ளார். சிஎஸ்ஆர் திட்டத்தில் 100 கோடி ரூபாய் வேறு மாநிலத்திற்கு கொடுப்பதாக இங்கு தெரிவித்தார்கள். இப்போது அங்கேயே 100 கோடி ரூபாயில் சிஎஸ்ஆர் மூலம் பணிகளை மேற்கொள்ள என்எல்சி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதனடிப்படையில் ஏக்கருக்கு ரூ.25 லட்சம் அடிப்படையில், 594 நில உரிமையாளர்களுக்கு, 173.4 எக்டர் மீதம் உள்ள நிலங்களுக்கு ரூ.29 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இடம் பெயர்வதற்கான கருணைத் தொகையாக ரூ.3.50 லட்சம் என்ற அடிப்படையில் 3.15 எக்டர் நிலத்திற்காக ரூ.23.34 லட்சம் நில உரிமையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. நில உரிமையாளரிடம் ஏற்கனவே பெறப்படாத உயர் வைப்புத் தொகை மூன்று மடங்காக தருவதற்கான ஒப்புதலை என்எல்சி வழங்கி உள்ளது. அவற்றையெல்லாம் செய்வதற்கான குறை தீர்ப்பு மையத்தை அரசு உருவாக்க இருக்கிறது.
61 ஆயிரம் ஏக்கர் சேத்தியாதோப்பில் தனியார் கையகப்படுத்துவதாக ஜி.கே. மணி தெரிவித்தார். ஆனால், இது போன்ற தகவல்கள் உண்மையில்லை. தமிழ்நாட்டில் தேவைக்கு மீறியும் தேவை இல்லாமலும் அரசு விவசாய நிலங்களை கையகப்படுத்தாது. ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்கு நிலங்கள் வாங்கப்பட்டது. திட்டம் ரத்து செய்யப்பட்ட உடன், உடனடியாக அந்த விவசாய நிலங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. நெய்வேலி நிலக்கரி நிறுவனம் என்பது தமிழ்நாட்டின் மின் தேவையை பெருமளவில் நிறைவு செய்யக்கூடியதாக உள்ளது. நம்முடைய மின் தேவை அளவிடு அடுத்த 5 ஆண்டுகளில் தேவையாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: வேதாரண்யத்தில் காஸ்டிக் சோடா தொழிற்சாலை? சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் கூறியது என்ன