சென்னை: இந்தி மொழி விஷயத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (ஏப்ரல்.17) தனது அறிக்கையில் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தார். அந்த அறிக்கையில், "தான், தனது, தமக்கு என்று இல்லாமல் தமிழ், தமிழ்நாடு, தமிழினம் என இமைப்பொழுதும் சோர்வின்றி உழைத்தவர் பேரறிஞர் அண்ணா. ஆனால், அதற்கு நேர்மாறான சூழ்நிலை தமிழ்நாட்டில் இன்று நிலவுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தேசியத் தலைவராக பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், குறிப்பாக வட மாநிலங்களில் அவர் புகழ் பரவ வேண்டும் என்பதற்காகவும் சில நடவடிக்கைகள் திமுகவால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலமைச்சரை பிரபலப்படுத்துவதற்காக இந்தி மொழியை திமுக அரசு பயன்படுத்தி வருவதாக செய்திகள் வந்துள்ளன.
ஸ்டாலினை விளம்பரப்படுத்த இந்தி: ஒரு பக்கம் இந்தித் திணிப்பு என்று கூறி தமிழுக்கு போராடுவது போல் நடிப்பது, மறுபக்கம் இந்தியில் திமுக தலைவர் ஸ்டாலினை விளம்பரப்படுத்துவது என இரட்டைவேடம் போடுகிறது திமுக. ஒருவேளை ஊருக்கு தான் உபதேசம் போலும்! திமுக அரசின் இந்த இரட்டை வேடத்திற்கு அதிமுக சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுகவின் இந்தச் செயலைப் பார்க்கும்போது, "பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி, பாமர மக்களை வலையினில் மாட்டி, இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே, நம் நாட்டிலே" என்ற புரட்சித் தலைவரின் பாடல் வரிகள் தான் என் நினைவிற்கு வருகின்றன என்று தெரிவித்து இருந்தார்.
அதிமுகவில் முன்னிலைப்படுத்தி கொள்ள ஓபிஎஸ் அறிக்கை: இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக, அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டுள்ளர். அதில், "அதிமுகவின் உட்கட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வந்த உடனேயே, நாளும் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அந்தக் கட்சியில் தன்னுடைய இருப்பைப் பிரபலப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஈடுபட்டிருக்கின்றார் என்பதை நாடு நன்றாக அறியும்.
தன்னை அதிமுகவில் முன்னிலைப்படுத்திப் பிரபலப்படுத்திக் கொள்ள அவர் எடுக்கும் இத்தகைய பகீரதப் பிரயத்தனங்கள் குறித்து எங்களுக்குக் கவலை ஏதும் இல்லை. ஆனால், இந்தியத் திரு நாட்டில் உள்ள முதலமைச்சர்களில் முதன்மையானவர் அவர்களைப் போற்றுவது கண்டு மனம் பொறுக்காமல்,‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்ற நிலையில் சொத்தை வாதம் ஒன்றைத் தூக்கிக் கொண்டு, அதன் பேரில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு ஓ.பன்னீர் செல்வம் குளிர் காய முற்பட்டு இருக்கின்றார்.
இந்தியாவின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் செயல்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள் என்று சொன்னவுடனேயே, தமிழ் நாட்டின் தலை மகனாக இருக்கும் முதலமைச்சர், உள்துறை அமைச்சரின் இந்தக் கருத்து இந்தியாவின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் செயல் என்றும் ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது; ஒருமைப்பாட்டையும் உருவாக்காது எனவும் தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் தனது நிலைப்பாட்டினை உறுதிபடத் தெரிவித்தார்.
வீராவேசமாக அறிக்கை விடும் ஓபிஎஸ்: ஆனால், இன்றைக்கு மொழிப் பிரச்சனையை எடுத்துக்கொண்டு வீராவேசமாக அறிக்கை விடும். ஓ.பன்னீர் செல்வம், சட்டமன்றத்தில் தனக்குப் பக்கத்திலேயே எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்திருக்கும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்துறை அமைச்சரின் இந்தக் கருத்துக் குறித்துத் தனக்கு ‘ஒன்றுமே தெரியாது’ என நழுவிக்கொண்டதை மட்டும் ஏன் வசதியாக மறந்து விட்டார் எனத் தெரியவில்லை.
உண்மையான தமிழ் உணர்வும், அக்கறையும் இருக்குமானால் எடப்பாடி பழனிச்சாமி இந்தப் பாசாங்குச் செயலைத்தான் ஓ. பன்னீர் செல்வம் கண்டித்திருக்க வேண்டுமே அல்லாமல் முதலமைச்சர் மீது உள்நோக்கம் கற்பிக்க முனைந்திருப்பது கண்டனத்திற்குரிய செயலாகும். பன்னீர் செல்வம் உலக நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கைகள் தோற்றுவிப்பது குறித்தும் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கின்றார்.
செம்மொழிச் சிறப்புகளை உலகெங்கும் கொண்டு சேர்க்க: முதலமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு தான் ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைக்கு ரூபாய். 1.25 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது என்பதனையும், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் செம்மொழித் தமிழ் விருது வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர், செம்மொழிச் சிறப்புகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் வகையில் முதற்கட்டமாகத் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள ஐந்து பல்கலைக் கழகங்களில் ‘செம்மொழித் தமிழ் இருக்கைகள்’ அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்திருப்பதையும் அவருக்கு நான் நினைவூட்டக் கடமைப்பட்டு இருக்கின்றேன்.
மறுமலர்ச்சியை உருவாக்கிய முதலமைச்சர்: அது மட்டுமல்ல; தமிழின் தொன்மையையும், பெருமையையும் உலகளாவிய வகையில் எடுத்தியம்பும் வகையில் தமிழ் நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்கு ரூபாய். ஐந்து கோடி நிதி ஒதுக்கம் செய்து, அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகள் மற்றும் தரவுகளின் மூலமாக மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தமிழின் தொன்மையையும், தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்களையும் அறிந்து கொள்ளும் வகையில் தொல்லியல் துறையில் ஒரு மறுமலர்ச்சியை முதலமைச்சர் உருவாக்கி இருக்கின்றார்.
சமூகநீதி சார்ந்த முன்னெடுப்பு: இத்தகைய ஆய்வு முடிவுகளையும், அவை சார்ந்த அறிவிப்புக்களையும் சமூகநீதி சார்ந்த முன்னெடுப்புகளையும் தமிழ் கூறும் நல்லுலகமும், ஆய்வு நெறி சார்ந்த அறிஞர் பெருமக்கள் மட்டுமன்றி இந்திய அளவில் வெகுமக்களும் தெரிந்து கொள்ள வகை செய்யும் வகையில் தான் செய்தி- மக்கள் தொடர்புத்துறை பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள் தவிர்த்து ஏனைய நூல்கள் இந்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு அன்றைய முதலமைச்சரால் 19-2-2019 அன்று வெளியிடப்பட்டதை ஓ. பன்னீர் செல்வம் மறந்திருந்தாலும் இத்தகைய அறிக்கைகளை வெளியிடும் முன்னர் தனது பழைய நண்பர் அன்றைய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்" என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழுக்கு என்றால் எந்த நேரத்திலும் வரத்தயார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்