சென்னை: சட்டப்பேரவையில், வினாக்கள் - விடைகள் நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு, துறை சார்ந்த அமைச்சர்கள், தங்களது பதிலை தெரிவித்துவந்தனர்.
இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறுகையில், “7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வருவதற்கு முக்கிய காரணம் அன்று எதிர்கட்சி தலைவராக இருந்த முதலமைச்சர் ஸ்டாலின் தான். ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட பிறகு தான் அது சட்டமாக மாறியது. அதுவரை 65 நாள்கள் ஆளுநர் சட்டமசோதாவை கிடப்பில் போட்டிருந்தார்.
அதிமுக ஆட்சி காலத்தில் நீட் தேர்வையை நுழையவிடாமல் இருந்திருந்தால் இந்த 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வாங்குவதற்கான நிலைமையே வந்திருக்காது. நீட் வருவதற்கு முக்கிய காரணம் அதிமுக ஆட்சி தான்” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, “கடந்த காலத்தில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தான் நீட் தேர்வு வந்தது” என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். இதற்கு பதிலளித்த உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, “காங்கிரஸ் ஆட்சியில் நீட் கொண்டு வந்திருந்தாலும், விருப்பமுள்ள மாநிலங்கள் மட்டும் நீட் தேர்வு எழுதலாம் என தமிழ்நாட்டில் நீட் தேர்வு நுழைய விடாமல் நீதிமன்றம் சென்று போராடி வெற்றி பெற்றவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம்: அமைச்சர் மெய்யநாதன்