சென்னை: தற்போதைய தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது அதில் 100க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப் பிரிவில் புகார்கள் கொடுக்கப்பட்டன.
இதனையடுத்து இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் வரை இந்த விசாரணை சென்றது. பின்னர், இது தொடர்பாக செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தற்போது அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் நடைபெற்ற அமலாக்கத் துறை சோதனையானது, 17 மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்தது. இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த நிலையில் நுங்கம்பாக்கம் அழைத்துச் செல்லும் வழியில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காரில் நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையின் வளையத்துக்குள் வைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் பார்ப்பதற்காக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு மற்றும் சேகர்பாபு உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்தனர்.
மேலும், மருத்துவமனைக்கு வெளியே சென்னை காவல் துறையினர் 100க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். முன்னதாக, நேற்றைய தினம் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டிருந்தபோது, முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருந்தார்.
குறிப்பாக, மத்தியில் ஆளும் பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் கையில் இருக்கும் துறைகளை வைத்து இவ்வாறு சோதனையிட்டு வருவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது என கூறினார். அமலாக்கத் துறையினரின் இந்த நடவடிக்கைக்கக்கு திமுக கூட்டணி கட்சியினரும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்திருந்தனர்.
இதையும் படிங்க: ED Raids: 'செந்தில் பாலாஜி வீட்டு ரெய்டுக்கும், அரசியலுக்கும் தொடர்பில்லை' - வானதி சீனிவாசன் விளக்கம்