சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் முழு ஊரடங்கு முடியும் வரையில் 24 மணி நேரமும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று (மே.11) தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை வாயிலில் இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், மற்ற அரசு மருத்துவமனைகளிலும் இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
தொடர்ந்து ஈஷா யோகம் மையம் மீதான நில அபகரிப்பு புகார் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "எங்கு, யார் தவறு செய்தாலும் அது எங்களது கவனத்திற்கு வரும் பட்சத்தில், திமுக ஆட்சியில் நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்து அறநிலைய துறை சார்பாக இன்று நடைபெறும் கூட்டத்திற்கு பிறகு, ஶ்ரீரங்கம் ஜீயர் நியமனம் தொடர்பாக ஆலோசிக்கப்படும். திமுக ஆட்சி வெளிப்படையான ஆட்சியாக இருக்கும். அதே போல, இந்துசமய அறநிலையத்துறையும் எவ்வித ஒளிவு மறைவும் இன்றி வெளிப்படையாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.