சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தின்போது, பண்ருட்டி தொகுதியில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக உறுப்பினர் வேல்முருகன் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.
குறிப்பாக, பண்ருட்டி தொகுதியில் 118 இடங்களில் ஆய்வு மேற்கொண்டதில் 75 இடங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதில் தனிநபர்கள் வாடகைக்கு, குத்தகைக்கு விட்டு பல கோடி ரூபாய் அளவில் லாபம் சம்பாதிப்பதாகவும்,நகர நிர்வாக ஆணையர் காவல் துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனவே இதில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, ”இந்தப் புகார்கள் அனைத்தும் 125 நாட்களுக்கு முன்பாக வந்த புகார்கள். இது சட்டத்தின் ஆட்சி. யார் தவறு செய்திருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
பண்ருட்டி தொகுதியில் உள்ள 152 இடங்களில், 118 இடங்களில் ஆய்வு மேற்கொண்டதில் 75 இடங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வசூல் செய்யப்பட்ட 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் திருக்கோயில் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, முதலமைச்சர் தலைமையில் இருக்கும் காவல் துறையை யாரும் உருட்டி மிரட்டி பணிய வைக்க முடியாது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஆக்கிரமிப்பு நிலங்கள் தொடர்ச்சியாக மீட்கப்படுகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் கோயில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் வேட்டை தொடரும்” என்றார்.