சென்னை: சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த 13ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், திமுக அரசின் முழு நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யப்பட்டது. கடந்த 16ஆம் தேதி வேளாண் துறைக்கு என தனியாக நிதிநிலை அறிக்கைத் தாக்கல்செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் தொடங்கி நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 17) நடைபெற்ற சட்டப்பேரவை விவாதத்தில், கோயில் நிலத்தில் வசிக்கும் ஏழை, எளிய மக்களை அகற்றக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் மாரிமுத்து கோரிக்கைவிடுத்தார்.
உள் வாடகைதாரர்களாக ஏற்றுக் கொள்ளுதல்
இதற்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், "இதுவரை 187 ஏக்கர் கோயில் நிலம் மீட்கப்பட்டுள்ளது. அதில் கீற்றுக் கொட்டகையில் குடியிருப்பவர் ஒருவர்கூட அகற்றப்படவில்லை. இவர்கள் திருக்கோயிலின் வாடகைதாரர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதில் 248 பேர், மயிலாப்பூரில் உள் கோயில் வாடகைதாரர்களாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இப்படி கோயில் நிலத்தில் குடியேறியவர்களை, திருக்கோயில்களின் உள் வாடகையாளர்களாகத் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்கின்றன” என்றார்.
இதையும் படிங்க: 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? - மா.சு பதில்