சென்னை: ஓட்டேரி, பிரிக்ளின் சாலை, அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (மார்ச் 3) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், " தமிழ்நாட்டில் உள்ள 150க்கும் மேற்பட்ட கோயில்களில் ஆய்வு மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கோயில்களுக்குச் சொந்தமான மனைகள், கடைகள், நிலங்களின் வாடகை தொகையை முறையாக வசூல் செய்யவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 47 ஆயிரத்திற்கு மேற்பட்ட கோயில்கள் உள்ளன.
இதில் 47 முதுநிலை திருக்கோயில்களும், முதுநிலை அல்லாத திருக்கோயில்களும் உள்ளன. நடப்பாண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். கோயில் விழாக்கள் நடத்துவது குறித்த கி.வீரமணியின் கருத்து பரிமாற்றங்களை நாங்கள் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இங்கு கருத்து சுதந்திரம் இருக்கிறது.
யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி சிறப்பாக செயலாற்றி வருகிறோம். அதேபோல் எந்தவொரு அரசியல் கலப்பும் இல்லாமல், சிறப்பாக சிவராத்திரி விழா நடத்தியுள்ளோம். வருங்காலங்களில் மகா சிவராத்திரி விழா இன்னும் மிகச் சிறப்பாக நடத்தப்படும். எந்த கட்டணமும் இல்லாமல், பக்தர்கள் சிறப்பாக சாமி தரிசனம் செய்தனர்.
அதுமட்டுமின்றி திமுக எம்மதமும் சம்மதம் என்று நினைக்கும் கட்சி. எங்களுக்கு ஆத்திகர்களும், நாத்திகர்களும், வாக்களித்திருக்கிறார்கள். இந்நிலையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான மயில் காணாமல் போனது குறித்து பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்.
கோயில் குளத்தில் சிலை உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்படும். எதிர்வரும் நிதிநிலை அறிக்கையில், புதிய திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் அறிவிப்புகளை வெளியிடுவார். பாமக சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிழல் நிதிநிலை அறிக்கையில் நல்ல திட்டங்கள் இருந்தால் அவை எடுத்துக்கொண்டு செயல்படுத்தப்படும்” என்றார்.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்