சென்னை: இந்தியா முழுவதும் மாதிரி சமுதாய சமையல் கூடம் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து டெல்லியில் இன்று (நவ.25) ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை, குறிப்பாக சமூகத்தில் எளிதாக பாதிக்கப்படும் மக்களுக்கு உறுதி செய்யும் விதத்தில் அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கரோனா பேரிடர் நிவாரணம்
அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் மானிய விலையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. திமுக அரசு பதவியேற்ற உடன் தமிழ்நாட்டிலுள்ள 2 கோடியே 9 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பினை ரூ.978 கோடி செலவிலும், தலா 4000 ரூபாய் ரொக்கத்தையும் கரோனா பேரிடர் நிவாரணமாக வழங்கியது.
வருகின்ற தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு 2022 ஜனவரி மாதத்தில் 21 உணவுப் பொருள்கள் அடங்கிய தொகுப்பினை 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1161 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட உள்ளது.
கலைஞர் உணவகம் அமைக்க கோரிக்கை
650 சமூக உணவகங்களை அம்மா உணவகம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக அரசு நடத்தி வருகிறது. தரமான உணவை மானிய விலையில் ஏழை, எளிய மக்களுக்கும் தேவைப்படுவோர்க்கும் இதன் மூலம் வழங்கி வருகிறது. இந்த உணவகங்களில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், பொங்கல் 5 ரூபாய்க்கும் பல்வகை சாதங்கள் (சாம்பார், கருவேப்பிலை மற்றும் எலுமிச்சை சாதம்) 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் பகலிலும், 2 சப்பாத்தி பருப்புடன் 3 ரூபாய்க்கு மாலையிலும் வழங்கப்படுகின்றன.
2021 ஜுன் 1 ஆம் தேதி முதல் 2021 நவம்பர் 18 ஆம் தேதி வரை 15 கோடிக்கும் மேலானோர் இந்த உணவகங்கள் வழியாக பயன்பட்டுள்ளனர். 30,490 கட்டுமான தொழிலாளர்கள் (வெளி மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் சேர்த்து) இதே காலகட்டத்தில் பயனடைந்துள்ளனர்.
கரோனா காலத்திலும் இதர பேரிடர் காலங்களிலும் இந்த உணவகங்களில் கட்டணம் இல்லாமல் வழங்கப்படுகிறது. வருங்காலத்தில் இதே போன்று கூடுதலாக 500 சமுதாய உணவகங்கள் 'கலைஞர் உணவகம்' என்ற பெயரில் அமைக்கப்பட உள்ளன.
இந்தத் திட்டத்திற்காக செப்டம்பர் மாதம் வரை 2021-22ம் நிதியாண்டில் 3227 மெட்ரிக் டன் அரிசியும் 362 டன் கோதுமையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு உணவகம் நடத்த சராசரியாக மாதம் ஒன்றுக்கு ரூ.3.5 லட்சம் செலவிடப்படுகிறது.
இத்திட்டத்தை வெற்றிகரமாகவும் தொடர்ந்து நடத்திடவும் தேவையான அனைவருக்கும் விரிவுபடுத்திடவும் ஒன்றிய அரசு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013ன் கீழ் 100 விழுக்காடு நிதி உதவி வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.
2021 செப்டம்பர் 21 ஆம் தேதி ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்தபோது கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை அதிகப்படுத்திட வேண்டுமென்று விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டமைக்காக தமிழ்நாடு விவசாய பெருங்குடி மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் அரைக்கப்படும் பச்சரிசியில் 1 லட்சம் டன்னை அருகிலுள்ள மாநிலங்களுக்கு இந்திய உணவுக் கழகத்தின் மூலம் ஒப்படைப்பு செய்து அதற்கு ஈடாக 1 லட்சம் டன் புழுங்கல் அரிசியை வழங்கவேண்டுமென்று அன்று நான் விடுத்த மற்றொரு கோரிக்கையையும் விரைந்து நிறைவேற்றிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாடு துணை நிற்கும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைநோக்கு தலைமை மற்றும் வழிகாட்டுதலின்படி ஒன்றிய அரசுடனும் பிற மாநில அரசுகளுடனும் இணைந்து செயல்பட்டு இந்தியாவை பட்டினி மற்றும் சத்துக் குறைவில்லா நாடாக மாற்றத் தமிழ்நாடு துணை நிற்கும்" என்றார்.
இதையும் படிங்க: வேதா இல்லத்தை ஒப்படைப்பது குறித்து அரசிடம் ஆலோசிக்கப்படும் - சென்னை ஆட்சியர்