வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருவெடுத்துள்ள நிலையில், பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அவசர ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "டிசம்பர் 02 முதல் புயலின் கோரத் தாண்டவம் உணரத் தொடங்கும். அது 4ஆம் தேதி பாம்பன் - குமரிக்கு இடையே கரையைக் கடக்க வாய்ப்பு இருக்கிறது. புயலின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடிய கன்னியாகுமரியில் இரண்டு தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களும், தூத்துக்குடியில் மூன்று குழுக்களும், திருநெல்வேலியில் இரண்டு குழுக்களும், மதுரையில் இரண்டு குழுக்களும் ஆக மொத்தம் ஒன்பது குழுக்கள் போதிய பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளன.
தமிழ்நாட்டுக்கு அருகில் உள்ள மாநிலங்களிலும் மீனவர்களின் பாதிப்புகளைக் கண்டறிய தமிழ்நாடு அலுவலர்கள் விரைந்துள்ளனர். ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களுக்குத் தேவையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. மாவட்ட மக்கள் யாரும் தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்த்துக் கொள்ளவும்.
புயல் உருவான பின்னர் புயல் நகரும் திசையைப் பொறுத்து பேருந்து சேவையை நிறுத்துவது, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தி அறிவிப்பார். புயல் சேத விவரங்களை ஆய்வுசெய்ய, வருகின்ற 5ஆம் தேதி மத்தியக் குழு தமிழ்நாடு வரவுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: மருத்துவக் கலந்தாய்வு - எட்டு மாணவர்கள் இருப்பிட சான்றிதழில் சந்தேகம்!