சென்னை: கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களின் பணி நேரம் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் ஆர். காந்தி பதில் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில், ”நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவி வரும் கரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பெரும்பான்மையான தொழில் நிறுவனங்கள் முடங்கி, எண்ணற்ற தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர். இதே போன்று கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் விற்பனை நிலையங்கள் செயல்படாததன் காரணமாக தமிழ்நாட்டிலுள்ள ஏழை நெசவாளர்களின் உழைப்பால் தயாரிக்கப்பட்ட கைத்தறி ரகங்கள் தேக்கமடைந்து ஏழை நெசவாளர்களின் வாழ்வாதாரம் குறைந்துள்ளது.
விற்பனை அதிகரிப்பு
தற்போது, கரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து ஊரடங்கிற்கு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விற்பனை நிலையங்கள் செயல்பட தொடங்கியுள்ளன. எனவே, இந்த வாய்ப்பினை பயன்படுத்தி ஏழை நெசவாளர்கள் தயாரித்துள்ள துணி ரகங்கள் அனைத்தையும் விற்பனை செய்து அவர்களுக்குத் தொடர் வேலைவாய்ப்பு அளிப்பது இன்றியமையாததாகும்.
மேலும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் என்பது ஒரு வணிக நிறுவனமாகும். தமிழ்நாட்டிலுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் ஏழை நெசவாளர்கள் தயாரிக்கும் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரம் உயரவும், அவர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர் வேலை வாய்ப்பினை உருவாக்க ஏற்படுத்தப்பட்ட நிறுவனமாகும்.
எனவே, ஏழை நெசவாளர்களுக்கு தொடர் வேலை வாய்ப்பினை வழங்கிட ஏதுவாக வாடிக்கையாளர்களை கவர்ந்து மில் துணிகளுக்கு நிகராக கைத்தறி துணிகளை விற்பனை செய்யும் உன்னத பணியினை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செய்து வருகிறது. எனவே, தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட்டு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் விற்பனையை அதிகரிக்க பல்வேறு உத்திகளை கையாள வேண்டியுள்ளது.
அலுவல் நேரம்
இதனடிப்படையில் தமிழ்நாட்டிலுள்ள நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு அளிக்கவும், பண்டிகை கால விற்பனையை முன்னிட்டும் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 105 விற்பனை நிலையங்களில் மாநகர பகுதிகள், மாவட்ட தலைநகரங்களில் செயல்படும் 64 விற்பனை நிலையங்களின் அலுவல் நேரத்தை மட்டுமே காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரையும், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அலுவல நேரம் 8 மணி நேரம் என்ற அளவில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. பிற ஊராட்சிப் பகுதிகளில் செயல்படும் விற்பனை நிலையங்கள் அனைத்தும் பழைய நிலையிலேயே; அதாவது இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொண்டதன் காரணமாக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் விற்பனை கடந்த ஆண்டை காட்டிலும் அதிகரித்து வருகிறது.
கழிப்பறை வசதி
கடந்தாண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை நடைபெற்ற விற்பனை 19.63 கோடி ரூபாயாகும். ஆனால், இந்தாண்டு ஏப்ரல் 2021 முதல் ஆகஸ்ட் 2021 வரை நடைபெற்றுள்ள விற்பனை 27.33 கோடியாகும். கடந்தாண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் 7.70 கோடி ரூபாய் விற்பனை அதிகரித்துள்ளது.
மேலும், தற்போது புதிதாக இடம் மாற்றம் செய்யப்படுகின்ற மற்றும் புதிதாக தொடங்கப்படுகின்ற கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் கழிப்பறை வசதி இருக்கக்கூடிய கட்டிடங்களிலேயே தேர்வு செய்யப்படுகிறது. ஏற்கனவே பல வருடங்களாக செயல்படும் விற்பனை நிலையங்களில் போதுமான இடவசதி இருக்கும் பட்சத்தில் அந்த விற்பனை நிலையங்களில் கழிப்பறை வசதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் விற்பனை குறைவாகவுள்ள கடைசி 55 விற்பனை நிலையங்களில் ஏப்ரல் 2021 முதல் ஆகஸ்ட் 2021 வரை 2.82 கோடி ரூபாய் மட்டுமே விற்பனை நடைபெற்றுள்ளது. இவ்வாறு, விற்பனை குறைவான காரணம் குறித்து காணொலிக் காட்சி மூலம் அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு விற்பனையை அதிகரிக்க தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேற்படி ஆய்வுக் கூட்டத்தின்போது தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் பெண் உயர் அலுவலர்களான நிதி ஆலோசகர், பொது மேலாளர் (நிர்வாகம்) ஆகியோர் முன்னிலையில் தான் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. எனவே, சில அலுவலர்கள் ஊழியர்களிடம் அநாகரிகமான வார்த்தைகளை உபயோகிக்கின்றனர் என்ற கருத்துக்கு இடமில்லை. மேலும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து தற்காலிக பணியாளர்களுக்கும் ஊதியம் உரிய நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
ஆக்கப்பூர்வமான நடவடிக்கை
கரோனா தொற்றின் சிரமமான காலகட்டத்திலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் அனைத்து பணியாளர்களும் ஏழை நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் தரத்தினை வாடிக்கையாளர்கள் மத்தியில் எடுத்துரைத்து சிறப்பாக விற்பனை செய்து வருகின்றனர்.
இவ்வாறு, ஏழை எளிய நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி அவர்களுக்கு தொடர் வேலை வாய்ப்பினை வழங்க கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் எடுக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் தங்களது நல்லாதரவினையும், ஒத்துழைப்பினையும் நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், கடந்த சில தினங்களுக்கு முன் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் பணி நேரம் அதிகமாகிறது என்ற குற்றச்சாட்டை அதிமுக ஒருங்கிணைப்பாளர் வைத்ததற்கு, அமைச்சர் ஆர். காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: யூதாஸ் நாணயம், திப்பு கீரிடம், நபி அணையா விளக்கு- அத்தனையும் பொய்யா கோபால்?