ஓய்வு பெற்ற நீதிபதியான ஆறுமுகம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தன்னுடைய உறவினரான செளந்தரியாவை வேதாரண்யத்தை சேர்ந்த அசோக் என்பவருக்கு கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து கொடுக்கப்பட்டது. திருமணத்திற்கு பின் அடிக்கடி வரதட்சணை கேட்டு குடும்பத்தில் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், திடீரென செளந்தரியா இறந்து விட்டதாக கடந்தாண்டு டிசம்பர் மாதம் மணமகன் வீட்டில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், செளந்தர்யாவின் உடலை பிரதேச பரிசோதனை எதுவும் செய்யாமல் அவசரவரமாக எரித்து விட்டனர். இது தொடர்பாக தங்களுடைய உறவினர்கள் மணமகன் வீட்டில் விசாரிக்க முற்பட்ட போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் தலையிட்டு மிரட்டியுள்ளார். இது தொடர்பாகவும், பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி தஞ்சாவூர் டி.எஸ்.பியிடம் புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பான விசாரணையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திடீரென தலையிட்டு சுமூகமாக விஷயத்தை முடித்து கொள்ள பெண்ணின் உறவினர்களை வற்புறுத்தியுள்ளார். இவ்வாறு காவல்துறையின் விசாரணையில் அமைச்சர் தலையிட்டதால் நியாயமான விசாரணை நடக்காது. எனவே இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், காவல்துறையின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக 4 வாரத்தில் வேதாரண்யம் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.