சென்னை: மருத்துவக்கல்லூரியின் 186ஆவது இளங்கலை பட்டமளிப்பு மருத்துவ நிறைவு தின விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றுது.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பத்தகங்களை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து விழா மேடையில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், “பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் வீரர்களுக்கு சிகிச்சையளிக்க 1664ஆம் ஆண்டு இந்த மருத்துவமனை உருவாக்கப்பட்டது. பின்பு மதார்ஸ் மருத்துவ கல்லூரி என்று பெயர் வைக்கப்பட்டது. கடந்த 2006ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, ராஜிவ் காந்தி மருத்துவமனை என்று பெயர் வைத்தார்.
உலகின் 100 சிறந்த மருந்துவக்கல்லூரிகளில் ராஜிவ்காந்தி கல்லூரி 60ஆவது இடத்தைப்பெற்றுள்ளது. ஆசியாவில் மிக பழமையான கல்லூரி இது. நீட் வந்த பின்பும் சரி, முன்பும் சரி தமிழ்நாடு மாணவர்களின் முதல் தேர்வாக ராஜிவ் காந்தி மருத்துவமனை தான் உள்ளது. இந்தியாவில் 302 அரசு கல்லூரிகள், 276 தனியார் கல்லூரிகள் என மொத்தம் 578 கல்லூரிகள் உள்ளன. அதில், தமிழ்நாட்டில் 70 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இது தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.
‘மக்களைத்தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலம் தற்போது வரையிலும் 71 கோடியே 41 லட்சம் பேர் சிகிச்சைப் பெற்று இருக்கிறார்கள். ஒரு கோடியே 13 லட்சம் பேர் தொடர் சிகிச்சையின் மூலம் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதேபோல, ‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தின் மூலம் 70ஆயிரத்து 315 பேர் 63.47 கோடி ரூபாய் செலவில் சிகிச்சைப் பெற்று இருக்கிறார்கள். நடமாடும் 349 மருத்துவ வாகனத்திட்டத்தின் மூலம் கிராமங்களில் உள்ள மக்களுக்கு சிகிச்சையளித்து வருகிறார்கள். தற்போது பட்டம் பெறும் மாணவர்கள் நீட் இல்லாமல் நீட்டாக முடித்துள்ளனர்” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், “நீதிக் கட்சியின் நடேசனர், இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி உள்ளிட்டப் பலர் இந்த கல்லூரியில் பயின்றுள்ளனர். மருத்துவமனை உணவகங்களை பரிசோதனை செய்து, தொடர்ந்து நடவடிக்கை எடுத்துள்ளோம். உணவகங்களைத் தொடர்ந்து கண்காணிக்க அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
விஐடி, அண்ணா பல்கலைக்கழகம், சத்திய சாய் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. வடமாநிலத்தில் இருந்து வந்தவர்களிடம் இருந்துதான் தொற்று பரவுகிறது என்று தவறாகப்பேசவில்லை. அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. வடமாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்தது. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறியதில் என்ன தவறு இருக்கிறது. வட இந்தியர்கள், தென் இந்தியர்கள் என்று நாங்கள் பிரித்துப் பார்க்கவில்லை. தொற்று யாருக்கு ஏற்பட்டாலும் அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறோம்” என்றார்.
இதையும் படிங்க: சாகுபடிக்காக வைகை அணையிலிருந்து 900 கன அடி நீர் திறப்பு