சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (டிசம்பர் 15) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், 'ஒமைக்ரான் வைரஸ் 77 நாடுகளைக் கடந்து பரவி வருகிறது. நவீன தொழில்நுட்பத்தில் மரபணு பரிசோதனை செய்ய கூடிய வசதி தமிழ்நாட்டில் உள்ளது. ஒமைக்ரான் வகை கரோனா வேகமாக பரவும் தன்மையுடையது. இந்தியாவில் இதுவரை 9 மாநிலங்களில் 68 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புனே, பெங்களூருவிற்கு அனுப்பப்பட்ட மாதிரிகள்
நைஜீரியாவில் இருந்து தோகா வழியாக வந்தவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு்ள்ளது. இந்நிலையில் அவருடன் பயணித்து சென்னை வந்தடைந்த ஒருவருக்கு எஸ் ஜீன் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவரது குடும்பத்தினர் 6 பேர் உள்பட 7 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருக்குமோ என சந்தேகம் இருக்கிறது.
அவர்களின் மரபணு மாற்றம் குறித்து புனேவிற்கு பரிசோதனை செய்ய அனுப்பப்பட்டுள்ளது. இவர்களுக்கு கிண்டி கிங் மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நைஜீரியாவில் இருந்து வந்தவருடன் பயணித்த வளசரவாக்கத்தைச் சேர்ந்தவருக்கு "எஸ் வேரியண்ட்" உறுதியான நிலையில், அவரின் மாதிரி பெங்களூருக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
வளசரவாக்கத்தைச் சேர்ந்தவருடன் இரண்டு நாட்களாக இருந்தவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு பரிசோதனை செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பாதித்தவரின் குடும்பத்தினர் 6 பேர், நண்பர் ஒருவர் என 7 பேருக்கு எஸ் ஜீன் வேரியண்ட் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவக்கட்டமைப்பை உறுதிப்படுத்த ஆட்சியர்களுக்கு உத்தரவு
சிகிச்சையில் உள்ள 7 பேருக்கும் ஒமைக்ரான் வைரஸ் உறுதி செய்யப்படலாம் என சந்தேகம் உள்ளது. அந்த 7 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எல்லோருக்குமே சிறிய அளவிலான பாதிப்பு மட்டுமே உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் நலமுடன் இருக்கும் நிலையிலும், தீவிர மருத்துவக் கண்காணிப்பும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவுடனே, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தேவையான மருத்துவக்கட்டமைப்பை உறுதிப்படுத்த தயார் நிலையில் இருக்க வேண்டும் எனக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து விமான நிலையங்களுக்கு வருபவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் தேவையான மருத்துவ உட்கட்டமைப்பு வசதி, ஆக்ஸிஜன் வசதிகள் ஆகியவை உள்ளன. கரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு எதுவும் வரவில்லை.
அனைவரும் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்தால் மட்டுமே ஒமைக்ரான் வைரஸை முற்றிலும் தடுக்க முடியும். கரோனா தடுப்பூசி போடாதவர்கள் வருகின்ற நாட்களில் போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிதாக 640 பேருக்கு கரோனா உறுதி