சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் மாவட்ட இணை இயக்குநர்களுடன் ஆய்வுக்கூட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடத்தினாா். அதனைத்தொடர்ந்து ஹஜ் பயணம் செல்பவர்களுக்கான தடுப்பூசி வழங்குவதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ''தமிழகத்தில் ஹஜ் யாத்திரை செல்பவர்கள் ஒன்றிய அரசின் வழிகாட்டுதல் படி, ஒன்றிய அரசிடமிருந்து 6,300 டோஸ் தடுப்பூசிகள் பெறப்பட்டு உள்ளன. ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு மே 15 முதல் 25 வரை, 19 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன. மேலும் அவர்களுக்குத் தடுப்பூசியும் போடப்படும். தமிழ்நாடு முழுக்க மருத்துவத்துறை கட்டமைப்பை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 செப்டம்பர் மாதம் சட்டமன்றத்தில் அறிவித்தார். அதனைத்தொடர்ந்து சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்டமசோதவை தாக்கல் செய்வதற்கு ஆளுநரிடம் அனுமதிபெறப்பட்டது. அவரும் பணமசோதா என்பதால் அனுமதியை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து சித்த மருத்துவப்பல்கலைக் கழகம் அமைப்பதற்கான சட்டமசோதா நிறைவேற்றி அனுப்பப்பட்டது. சித்த மருத்துவப்பல்கலைக் கழகம் அமைப்பதற்கான இடம் மாதவரத்தில் 25 ஏக்கர் தயார் நிலையில் உள்ளது. மேலும் சித்த மருத்துவப்பல்கலைக்கழகம் உள்ளிட்ட இந்திய மருத்துவத்திற்கான அலுவலகம் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா மருத்துவமனையில் தயார் நிலையில் உள்ளது.
சித்த மருத்துவப்பல்கலைக்கழக மசோதாவிற்கு அனுமதி வழங்க வேண்டும் என 7 முறை சட்டத்துறையின் மூலம் ஆளுநருக்கு கடிதம் எழுதி அனுப்பப்பட்டது. மேலும் சித்த மருத்துவப்பல்கலைக் கழகம் அமைப்பது குறித்து ஆளுநர் கேட்ட விளக்கத்தை அளித்துள்ளோம். தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி மாணவர்கள் சேர்க்கை, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்படும் எனவும் தெரிவித்தோம்.
தமிழ்நாட்டில் பெருவாரியான மக்களின் விருப்பமான சித்த மருத்துவப் பல்கலைக்கழக ஆளுநர் ஒப்புதல் தருவார் என கருதுகிறோம். சித்த மருத்துவப் பல்கலைக் கழகம் அமைப்பதற்கான ஒப்புதலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி சட்டத்துறையின் மூலம் 7 முறை தொடர்ந்து ஆளுநருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
பல்கலைக் கழக மானியக்குழுவின் விதிகளில் வேந்தராக ஆளுநர் தான் இருக்க வேண்டும் என்று எந்த குறிப்பும் இல்லை. குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக மோடி இருந்தபோது, பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை முதலமைச்சர் வேந்தராக இருந்து நியமிக்க வேண்டும் என சட்டம் கொண்டு வந்தார்.
அவரின் வழியில் செயல்படும் ஆளுநரும் சித்த மருத்துவப்பல்கலைக் கழகத்திற்கு வேந்தராக முதலமைச்சரை நியமனம் செய்து அனுமதி வழங்க வேண்டும். தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழங்களின் நிர்வாகத்தில் உள்ளவர்கள் தான் வேந்தர்களை நியமனம் செய்கின்றனர். அதேபோல் மாநில அரசின் நிதியுதவியுடன் இயங்கும் பல்கலைக் கழகங்களுக்கும் துணைவேந்தர்களை முதலமைச்சர் வேந்தராக இருந்து நியமிக்க வேண்டும்.
தமிழ்நாடு இயல் இசைப் பல்கலைக் கழகத்திற்கு வேந்தராக முதலமைச்சர் நியமனம் செய்யப்பட்ட மசோதாவிற்கு அப்போதைய ஆளுநர் ரோசையா அனுமதி வழங்கினார். அதன் அடிப்படையில் துணைவேந்தரை முதலமைச்சர் நியமனம் செய்து வருகிறார். இதுவரை சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதாவை மறுத்தோ அல்லது வேண்டாம் என்றோ ஆளுநரிடம் இருந்து பதில் வரவில்லை.
சித்த மருத்துவத்திற்கு ஆளுநர் விரோதியாக இருக்க மாட்டார் என நம்புகிறோம். சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா நிறைவேற்ற தமிழக அரசு சட்டப்போராட்டம் நடத்தி வருகிறோம். உயர்கல்வித்துறையில் உள்ள பல்கலைக்கழகங்களிலும் வேந்தர்களை நியமனம் செய்வதற்கான மசோதவையும் நிறுத்தி வைத்துள்ளார். நீட் தேர்வு விலக்கு பெறுவதற்கான மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் மீது குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து கேட்கப்பட்ட விளகத்திற்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது” எனத்தெரிவித்தார்.
இதையும் படிங்க: AR Rahman: 'தி கேரளா ஸ்டோரி' சர்ச்சை.. கவனத்தை ஈர்த்த ஏ.ஆர்.ரகுமான் ரியாக்ஷன்!