சென்னை: கலைவாணர் அரங்கில் நடைபெற்றுவரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று (செப்டம்பர் 2) மக்கள் நல்வாழ்வுத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது மா. சுப்பிரமணியன் பேசுகையில், "கரோனா தொற்றின் தாக்கம் திமுக பதவியேற்பதற்கு முன்பு வரை 34 ஆயிரத்து 184 என உயர்ந்திருந்தது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதலமைச்சரின் தீவிர நடவடிக்கையால் தற்போது ஆயிரத்து 500 ஆக குறைந்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை நாள் ஒன்றிற்கு 61 ஆயிரத்து 441 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சிக் காலத்தில் மொத்தமாக 63 லட்சத்து 28 ஆயிரத்து 407 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. திமுக ஆட்சிக்கு வந்த பின்பு நாள் ஒன்றிற்கு இரண்டு லட்சத்து 11 ஆயிரத்து 777 தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
அதிமுக ஆட்சிக் காலத்தில் தடுப்பூசியை வீணடித்த மாநிலத்தில் முதல் மாநிலமாகத் தமிழ்நாடு இருந்தது. சுமார் நான்கு லட்சத்து 34 ஆயிரம் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளன.
திமுக ஆட்சியில் தடுப்பூசியைக் கூடுதலாகப் பெறுவதில் முதல் மாநிலமாகத் தமிழ்நாடு வந்துள்ளது. அதிமுக ஆட்சியின்போது மூன்று கோடியே 13 லட்சத்து 80 ஆயிரத்து 200 தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில் மூன்று கோடியே 11 லட்சத்து ஆறாயிரத்து 218 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
திமுக ஆட்சிக்கு வந்த 117 நாள்களில் இரண்டு கோடியே 69 லட்சத்து 16 ஆயிரத்து 316 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மத்திய அரசு மாநில அரசிற்கு 75 விழுக்காடு தடுப்பூசிகளையும் தனியாருக்கு 25 விழுக்காடு தடுப்பூசிகளையும் தந்துவருகிறது. ஆனால் தனியார் மருத்துவமனைகள் 10 விழுக்காடு தடுப்பூசிகளைத்தான் பயன்படுத்திவந்தன.
அதைக் கருத்தில்கொண்டு அரசிற்கு 90 விழுக்காடு தடுப்பூசி தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு கேட்டது. சி.எஸ்.ஆர். நிதியைக்கொண்டு தனியாருடன் இணைந்து இலவச தடுப்பூசிகள் போடும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கறுப்புப் பூஞ்சை நோயால் நான்காயிரத்து 465 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு மருத்துவம் அளிக்கப்பட்டுவருகிறது. அனைவருக்கும் மருந்துகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு கூடுதலாக 85 ஆயிரம் படுக்கைகள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.
மூன்றாவது அலை குழந்தைகளைத் தாக்கமல் இருக்க ஐ.வி.ஐ.ஜி. மருந்துகள் தயாராக உள்ளன. கடந்த மூன்று மாதங்களில் தமிழ்நாட்டில் 40 கிராமங்களுக்கும் நான்கு நகரங்களுக்கும் 100 விழுக்காடு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
ஐந்து வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு 'நீமோ காஞ்சுக்கள்' தடுப்பூசியைச் செலுத்த மத்திய அரசு 2017ஆம் ஆண்டில் அறிவித்தது. நிமோனியா, மூளைக்காய்ச்சலில் குழந்தைகள் பாதிப்படையக் கூடாது என்பதற்காக அந்தத் தடுப்பூசியைப் போடுவதற்கு மத்திய அரசு அறிவித்தது.
திமுக ஆட்சியில் ஜூலை 13ஆம் தேதி பூந்தமல்லியில் 55 ஆயிரத்து 331 குழந்தைகளுக்கு அந்தத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தினால் கடந்த ஆண்டு ஆயிரத்து 466 பேர்தான் பயனடைந்துள்ளனர். அதற்காகத் தனியாருக்கு அரசு கட்டிய தொகை ஆறு கோடியே 98 லட்சம் ரூபாய்.
திமுக ஆட்சிக்கு வந்தபின் முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் 30 ஆயிரத்து 223 பேர் பயனடைந்துள்ளனர்.
இதற்காகத் தனியாருக்கு அரசு 379 கோடியே 11 லட்சம் ரூபாய் கட்டியுள்ளது. ஆர்டி-பிசிஆர் சோதனை கடந்த ஆட்சியில் 17 லட்சத்து 67 ஆயிரத்து 967 பேருக்கு 218.14 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. திமுக ஆட்சியில் 18 லட்சத்து 38 ஆயிரம் பேருக்கு 106 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
அரசின் செலவைச் சரிபாதியாகக் குறைத்துள்ளது. கரோனா காலத்தில் மருத்துவர், செவிலியர், மருத்துவம் சார்ந்த பணியாளர்களுக்கு உணவை வாங்க 550 முதல் 600 ரூபாய் வரை அதிமுக செலவு செய்துள்ளது. தற்போது உணவிற்கு (நாள் ஒன்றிற்கு) 30 லட்சமும், மொத்தமாக 36 கோடியே 90 லட்சம் ரூபாயும் மிச்சப்படுத்தப்பட்டு தரமான உணவு வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் மூன்றடுக்கு முகக்கவசத்தை 9.80 ரூபாய்க்கும், திமுக ஆட்சியில் 1.15 ரூபாய்க்கு வாங்கப்பட்டது. என்.95 முகக்கவசம் 14.40 ரூபாய்க்கு அதிமுக ஆட்சியின்போது வாங்கப்பட்டது. இப்போது அதே முகக்கவசத்தை 6.95 ரூபாய்க்கு வாங்கியதால் இரண்டு கோடியே 35 லட்சம் ரூபாய் மிச்சமாக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் கரோனா பிபிடி உடை 385 ரூபாய்க்கும், திமுக ஆட்சியில் 139 ரூபாய்க்கும் வாங்கப்பட்டுள்ளது.
தற்போது சுமார் 13 லட்சத்து 60 ஆயிரம் உடைகளை வாங்கியதில் 33 கோடியே 36 லட்சம் ரூபாய் மிச்சமாக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்தில் இந்த அளவிற்குப் பணத்தை மிச்சப்படுத்தியுள்ளோம். ஆனால் அதிமுக ஆட்சியில் நிதி எங்கு சென்றது என்று தெரியவில்லை.
மருத்துவர், செவிலியர், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் வெளிப்படையான இடமாற்றம் மூலமாக ஆறாயிரத்து 153 பேர் தங்களுக்குத் தேவையான இடங்களில் பணியமர்த்துதல் பெற்றுள்ளனர். மக்களைத் தேடி மருத்துவத்தால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் நோய் உள்ளவர்கள் இன்றுவரை சுமார் இரண்டு லட்சத்து 98 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.
இத்திட்டம் இரண்டு, மூன்று ஆண்டுகளில் 100 விழுக்காடு நிறைவேற்றப்படும். டிசம்பர் இறுதிக்குள் ஒரு கோடி பேர் பயனடைவார்கள். தொற்று நோயினால் ஆண்டிற்கு சுமார் ஐந்து லட்சம் பேர் மரணமடைகிறார்கள். இறப்பின் எண்ணிக்கையை இரண்டு ஆண்டிற்குள் குறைக்க இத்திட்டம் உறுதுணையாக அமையும்" என்றார்.
இதையும் படிங்க: 'எடப்பாடி முதலமைச்சராக இருந்தபோதுதான் நீட் கொண்டுவரப்பட்டது'