சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று தடுப்பூசிகள் தீர்ந்துபோனதால் அடுத்த ஒருசில நாள்களில் தடுப்பூசிகள் செலுத்தும் பணி நிறுத்திவைக்கப்படும் என அரசு அறிவித்திருந்த நிலையில், நேற்று (ஜூன் 1) ஒன்றிய அரசிடமிருந்து நான்கு லட்சத்து 20 ஆயிரத்து 570 தடுப்பூசிகள் சென்னை வந்தன.
இதனை ஆய்வுசெய்த அமைச்சர் மா. சுப்பிரமணியம், மேற்கு மண்டலத்தில் தொற்றின் அளவு சற்று கூடுதலாக இருப்பதால் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களுக்கு சற்று கூடுதலான அளவு தடுப்பூசி அனுப்பப்படும் எனக் கூறினார்.
ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த 4,20,570 கோவிஷீல்டு தடுப்பூசிகளை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி குளிர்பதன நிலையத்தில் மா. சுப்பிரமணியம் பார்வையிட்டார்.
அப்போது துறையின் முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் மா. சுப்பிரமணியம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் தடுப்பூசி தேவைகளுக்காக முதலமைச்சர், துறையின் முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் தொடர்ந்து மத்திய அரசின் அலுவலர்களுடன் பேசியதன் விளைவாக மே மாத இறுதிக்குள் 1.75 லட்சம் கோடி அளவுக்கு மத்திய அரசின் தொகுப்பிலிருந்து தடுப்பூசிகள் வரவேண்டி இருந்தன.
அதில் இன்று (ஜூன் 1) நான்கு லட்சத்து 20 ஆயிரத்து 570 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளன. அத்தோடு மட்டுமல்லாமல் 1.75 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்திருக்கின்றன.
இதுவரை தமிழ்நாட்டிற்கு வந்து மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை ஒரு கோடியே ஒரு லட்சம் ஆகும். இதுவரை 90 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. இப்பொழுது கையிருப்பு ஆறு லட்சம் அளவுக்கு இருக்கிறது.
தற்போது வந்திருக்கிற இந்தத் தடுப்பூசிகள் அனைத்தும் மாவட்டம் வாரியாகப் பிரித்து, வாகனங்களின் மூலம் அனுப்பப்படும். இன்று (ஜூன் 2) அனைத்து மாவட்டங்களுக்கும் இது சென்று சேர்ந்துவிடும்.
அதேபோல் இந்த நான்கு லட்சத்து 95 ஆயிரம் தடுப்பூசிகளும் எந்தெந்த மாவட்டத்திற்கு எவ்வளவு அனுப்பப்பட்டது என்ற விவரத்தை டிபிஎச் இணையதளத்தின் மூலமும், சமூக வலைத்தளங்களின் மூலமும் பிரசுரிக்கப்படும். இதனை யார் வேண்டுமானாலும் வெளிப்படையாகத் தெரிந்துகொள்வதற்கு ஏதுவாக இந்த ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கிறது.
மக்கள் தொகைக்கேற்ப ஒவ்வொரு பகுதிக்கும் தடுப்பூசிகள் பிரித்து தரப்பட்ட கொண்டிருக்கிறது. சென்னைக்கு அதிக தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. சென்னைக்கு அடுத்து அதிக மக்கள் தொகை கொண்ட கோயம்புத்தூருக்கு அதிக தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
மேற்கு மண்டலத்தில் தொற்றின் அளவு சற்று கூடுதலாக இருந்த நிலையில் அங்கு கூடுதலான தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். அந்த வகையில் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களுக்கு சற்று கூடுதலான அளவு அனுப்பப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆக்சிஜன் 90க்கு கீழ் இருந்தால் மட்டுமே மருத்துவமனையில் கரோனா சிகிச்சை!