சென்னை: தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில் அமைச்சர் கே.என்.நேரு அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசியதாவது: சென்னையில் மெட்ரோ இரயில் மற்றும் மேம்பாலம் கட்டும் பணியின் காரணமாக மழைநீர்த் தேக்கம் ஏற்பட்டது. இந்த நீர்த்தேக்கமும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அகற்றப்பட்டது ,மழையின் காரணமாக எந்த பகுதியிலும் தண்ணீர் தேங்காதவகையில் விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் இதற்கான பணிகளை அனைத்து மண்டல அலுவலர்களும் தொடர் கண்காணிப்புடன் மேற்கொள்ள வேண்டும் எனவும் தற்பொழுது நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முழுமையாக முடித்திட வேண்டும். என உத்தரவிட்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் மற்றும் மக்களுக்கான நோய்த்தடுப்பு சிகிச்சைகளைச் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். குடிநீர், கழிவுநீர் மற்றும் மின்சார வாரியப் பணிகள் போன்றவற்றையும் சாலை வெட்டுக்களை உடனுக்குடன் சீர்செய்ய வார்டு வாரியாகவும், மண்டல வாரியாகவும், தலைமையிடத்திலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் சிறப்பாகச் செயல்பட்டு பணியாற்றிட வேண்டும் என்றும் அமைச்சர் கூட்டத்தில் அறிவுறுத்தினார்
முன்னதாக, அமைச்சர் கே.என்.நேரு பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தலைமையிடத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படுவதைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாநகராட்சியின் சார்பில் அனைவரும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர் எனவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் தெரிவித்ததாவது: பல ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் 17 செ.மீ.க்கும் அதிகமாக மழை பெய்த காரணத்தினால், மெட்ரோ இரயில் பணிகள் காரணமாக கத்திபாரா சந்திப்பிலும், இரயில்வே மேம்பாலம் கட்டும் பணியின் காரணமாக கணேசபுரம் சுரங்கப்பாதையிலும் மழைநீர்த் தேக்கம் ஏற்பட்டது.
இதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அகற்றப்பட்டது. மற்ற அனைத்து இடங்களும் இயல்பு நிலைக்கு வந்துவிட்டது .இன்று நடைபெற்ற கூட்டத்தில் மழைநீர் தேங்கிய இடங்களில் தண்ணீர் நிற்காமல் செல்வதற்கான வழிகள், மழை நீரை வெளியெட்ருவதற்கான மோட்டார் பம்புகள், வாகனங்கள் ஆகியவற்றைத் தயார்நிலையில் வைத்திருத்தல், பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீர்செய்தல், மழைநீர் வடிகால் மற்றும் சாலைப் பணிகள் ஆகியவற்றை உடனடியாக முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வருதல். போன்ற பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது எனவும் மழைக்காலத்தில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.