வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர், வட வேலூர் கிராமத்தில் தனது குத்தகையின் கீழிருந்த ஏழு ஏக்கர் நிலத்தை, அமைச்சர் கே.சி. வீரமணி, ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி ஆகியோர் சட்டவிரோதமாகக் கையகப்படுத்த முயற்சி செய்வதாகவும் இது தொடர்பாக தான் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான குற்றவியல் தலைமை வழக்கறிஞர் நடராஜன், "இந்த விவாகரத்தில் வழக்குப்பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என மாவட்டக் கண்காணிப்பாளர் முடிவெடுத்துள்ளார். புகாரின் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்காவிட்டால், உயர் அலுவலர்களிடமும் பின்னர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரலாம் என்கின்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஜெயப் பிரகாஷ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அஞ்சல் மூலம் காவல் துறைக்கு முதலில் புகார் அனுப்பிவிட்டு, உடனடியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கே உகந்ததல்ல” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, சீலிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்ட மாவட்டக் கண்காணிப்பாளரின் அறிக்கையை பதிவுசெய்து கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை நவம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க:
விக்கிரவாண்டியில் வெற்றி நிச்சயம்! -திமுக வேட்பாளர் நம்பிக்கை