சென்னை ராயபுரத்தில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளியில் ஐந்து பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு 738 விலையில்லா மிதிவண்டி வழங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெயக்குமார் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கினார்.
மாணவர்களிடம் அறிவுசார்ந்த கேள்விகளை கேட்ட அமைச்சர் ஜெயக்குமார், அவரது கேள்விக்கு பதிலளித்த 15 மாணவர்களுக்கு தலா 500 ரூபாய் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் பாஜக, பாமக, தமாகா ஆகிய கட்சிகள் உள்ளன. இதுவே வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தொடரும். முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணிக் கட்சிகள் அனைவரும் இதை ஏற்றுக் கொள்வார்கள்.
முதலமைச்சர் வேட்பாளர் குறித்து பாஜக மேலிட பொறுப்பாளர் மற்றும் மாநில தலைவர் முடிவு செய்யும் அதிகாரம் கிடையாது. பாஜக தேசிய தலைமை மாறுபட்ட கருத்தை கூற மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதிமுகவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. தமிழ்நாட்டில் கூட்டணி அமைச்சரவை என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
அதிமுக கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் விலகாது. புரிந்தும் புரியாமல் இருக்கீங்களா அல்லது புரியாதது போல் நடிக்கிறீர்களா என்பது தெரியவில்லை. தூங்குபவர்களை எழுப்பலாம், ஆனால் தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது" எனக் கூறினார்.
இதையும் படிங்க: தொல்லியல் அலுவலர் பதவிக்கு வெளிமாநிலத்தவர் யாரும் தேர்வுசெய்யப்படவில்லை - தேர்வாணையம் தகவல்!