சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது பற்றி முடிவு எடுக்க ஐந்து அமைச்சர்கள், மூன்று ஐஏஎஸ் அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தங்கமணி மற்றும் நிதி ( செலவினம் ), சட்டம், உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜனவரி 6ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், "அண்ணா பல்கலைக்கழகம் உலகளவில் பாராட்டப்படும் நிலையில் சீர்மிகு பல்கலைக்கழகமாக மாறும் போது கல்விச் சூழல் இன்னும் அதிகரிக்கும். இட ஒதுக்கீட்டிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது" என்றார்.
மேலும் பேசிய அவர், "விரிவாக கலந்து ஆலோசித்து உயர்மட்டக் குழு தனியாக துணைக்குழுவை அமைத்துள்ளது. பல்கலை மானியக் குழு அளிக்கும் நிதியை பெறுவது, மற்ற பிரச்னைகள் குறித்து துணைக்குழு அறிக்கை தாக்கல் செய்யும்" என்றார். பின்னர், அண்ணா பல்கலைக்கழகம் பெயர் மாறுமா என்பது குறித்த கேள்விக்கு, எந்த காலத்திலும் அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றப்படாது என்றும் அது எப்போதும் போல அண்ணா பெயரிலேயே இயங்கும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: