மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், "இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலின்படி, புயல் முன்னெச்சரிக்கைை நடவடிக்கையாக ஆழ்கடல் மீன்பிடி படகுகளை
தொடர்பு கொண்டு கரை திரும்புமாறு கேட்டுகொள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத், இலட்சத்தீவு யூனியன் பிரதேசங்களின் மீன்துறை இயக்குநர்கள், அரசு செயலர்களுக்கு, அம்மாநில மீன்பிடி துறைமுகங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்களின் படகுகளை நிறுத்துவதற்கு அனுமதிக்கவும் அத்தியவாசிய தேவைகளை வழங்கிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அரசு மேற்கொண்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக 166 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக கரை திரும்பியுள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 36 படகுகள் உள்பட124 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கொல்லம், கொச்சின், ரத்தினகிரி, மங்களூரு, கோவா, இலட்சதீவு, வெராவல், மும்பை ஆகிய கடல் பகுதிகளில் நிறுத்திி வைக்கப்பட்டுள்ளன.
படகுகள் அனைத்தும் தொடர்பு கொள்ளப்பட்டு அவற்றின் இருப்பிடம் குறித்த தகவல்கள் இந்திய கடலோர பாதுகாப்பு படை மற்றும் இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்டு, அவர்கள் மூலம் கடலில் உள்ள படகுகளை எச்சரித்து கரைக்கு திரும்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.