சென்னை தி.நகரில் உள்ள தியாகராயர் அரங்கில் நடைபெற்ற தேசிய ஊட்டச்சத்து மாத தொடக்க விழா நிகழ்ச்சியில் சமூகநலம் மற்றும் சத்துணவுத் துறை அமைச்சர் சரோஜா, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, “ஒட்டுமொத்த அமைச்சரவையும் வெளிநாடு பயணம் செல்லவில்லை. ஆறு அமைச்சர்கள் மட்டுமே சென்று இருக்கிறார்கள். தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக வர வேண்டுமென்று அரசு எடுக்கும் முயற்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து தெரிவித்திருந்தால் நல்லது. ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பேசியிருக்கிறார்.
’ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்’ எந்த நிலையிலும் தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது. பாதிப்பு ஏற்படாத வகையில் இருந்ததால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதே போல, வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்களுக்கும் இலவச ரேஷன் அரிசி திட்டத்தினால் பாதிப்பு இருக்காது.
நடிகர் விஜய் திமுகவுடன் சேர்ந்தால் தாராளமாக சேர்ந்து கொள்ளட்டும். திமுக தலைவர் விஜய்யை சந்தித்து பேசியதன் காரணம், அதிமுகவின் வாக்கு சதவிகிதம் உயர்ந்துள்ளதை சரிசெய்வதற்காக இருக்கலாம். திமுக அமெரிக்க, ரஷ்ய அதிபர்களையே சந்தித்தாலும் ஒன்றும் நடக்காது. ஸ்டாலின் எவ்வளவு குட்டிக்கரணம் போட்டாலும், எவ்வளவு பணம் செலவு செய்தாலும் 2021இல் ஜார்ஜ் கோட்டையில் அதிமுகதான் கொடியேற்றும்" என்றார்.