சென்னை: முகப்பேர் அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் உயிர்கோள அடர்வனம் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருவள்ளூவர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பின் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திறன் வகுப்பறையை திறந்து வைத்தார். பின்னர் உயிர்கோள அடர் வனத்தை பார்வையிட்டு 1000-வது மரக்கன்றை நட்டார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, "அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் அடையாளம். மிக விரைவில் முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி அரசுப்பள்ளிகள் பெருமையின் அடையாளமாக மாறும்.
நீட் தேர்வை பொறுத்தவரை ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நிலைப்பாடும் நீட் தேர்வுக்கு விதிவிலக்கு வழங்க வேண்டும் என்பதே. அரசின் நிலைப்பாடும் அதுவே. அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம்.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்து வரும் நிலையில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்களும் அரசுப்பள்ளிகளை மேம்படுத்த முன்வர வேண்டும்.
தமிழ்நாட்டில் 9 முதல் 12 வரை உள்ள வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். பிற மாநிலங்களில் உள்ள நிலவரம் பற்றி முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்ற பின், உரிய முடிவு எடுக்கப்படும். பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப பெற்றோர் தைரியமாக முன்வர வேண்டும்.
ஆசிரியர் தகுதி தேர்வில் குழப்பம் உள்ளது என்றும் அதில் மாற்றம் கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.கரோனா கட்டுக்குள் வந்த பின், தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் இணைக்கும் திட்டம் இல்லை.அம்பத்தூர் பகுதியில் அரசு ஆண்கள் பள்ளி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் விரைவில் அது குறித்து முடிவெடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: ஆசிரியர் இடமாறுதலுக்கு விரைவில் கவுன்சிலிங்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்