சென்னை: பள்ளிக் கல்வித்துறை சார்பில், முதல் முறையாக மாநில அளவிலான குழந்தைகள் தின விழா, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில், குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளோடு நடைபெற்றது. அந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டனர்.
"குழந்தைகள் தின விழா 2023" என்ற தலைப்பில் நடந்த இந்த விழாவில், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடைபெற்ற ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டு சான்றிதழ்களையும், தொடக்கக் கல்வித் துறையில் ஒரு மாவட்டத்திற்கு மூன்று சிறந்த பள்ளிகள் என தேர்வு செய்து, 38 மாவட்டங்களில் உள்ள 114 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குச் சிறந்த பள்ளிக்கான கேடயங்கள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி, "பள்ளி குழந்தைகளுக்கான குழந்தைகள் தின விழா மாநில அளவில் முதல்முறையாக நடத்தப்படுகிறது. இதனால் மாணவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரும் ஆண்டுகளில் மாநில அளவில் குழந்தைகள் தினவிழா நடத்தப்படும்.
பருவ மழை தீவிரமடைந்து இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. அதே சமயம் பொதுத்தேர்வுகள் துவங்குவதற்குள் பாடங்களை முடிக்க வேண்டிய சூழல் இருப்பதால், அதற்கு மாற்று வழிகளை ஆலோசித்து வருகிறோம். அந்த வகையில் மழைக்காலம் முடிந்த பிறகு, சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்க திட்டமிட்டுள்ளோம்.
மேலும், அரசு சார்பில் நீட் (NEET), ஜே.இ.இ (JEE) போன்ற தேர்வுகளுக்குச் செப்டம்பர் மாதம் முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த வகையில் நீட் தேர்வு பயிற்சிக்கு 46 ஆயிரத்து 216 மாணவர்களும், ஜே.இ.இ பயிற்சிக்கு 29 ஆயிரத்து 279 மாணவர்களும், நீட் மற்றும் ஜே.இ.இ ஆகிய இரண்டு தேர்வுகளுக்கும் சேர்ந்து 31 ஆயிரத்து 730 மாணவர்கள் என மொத்தம் 1 லட்சத்து 7 ஆயிரத்து 225 மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது" என்று கூறினார்.
அதன் பின்னர் பொதுத்தேர்வுக்கான அட்டவணை குறித்து கேட்கப்பட்ட போது, "அரசு பொதுத்தேர்வுக்கான அட்டவணை குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும். நீட், கிளாட் (CLAT) போன்ற போட்டி தேர்வு தேதிகளில் பொதுத்தேர்வு தேதி வராத வகையில் 3 வகையான அட்டவணை தயார் செய்யப்பட்டு உள்ளது. அது குறித்த அறிவிப்பும், பொதுத் தேர்விற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கூர்நோக்கு இல்லங்களின் செயல்பாடுகள்; ஒரு நபர் குழு அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்பித்தார் நீதிபதி சந்துரு!