பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற 67 மாணவர்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் 10ஆம் தேதி துபாய்க்கு கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு பயிலும் 33 மாணவிகள், 34 மாணவர்கள் என மொத்தம் 67 பேர் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளனர். துபாய் சென்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி மற்றும் அரசுப் பள்ளி மாணவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் சென்றபோது, அபுதாபி அரச குடும்பத்தினரின் அரண்மனையையும், ஐக்கிய அரபு அமீரகம் வளர்ச்சியடைந்த வரலாற்றையும் விவரித்த மின்னொளி விளக்கப்படத்தையும் மாணவர்களுடன் சேர்ந்து கண்டுகளித்தனர்.
ஐக்கிய அரபு அமீரகம் சென்ற அரசுப்பள்ளி மாணவர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். துபாயின் புகழ் பெற்ற Louvre அருங்காட்சியகத்தையும், அரசு குடும்பத்தினரின் அரண்மனைகளையும் பார்வையிட்ட மாணவர்கள் தங்களின் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி உள்ளனர்.
சார்ஜா பன்னாட்டு புத்தகத்திருவிழாவில் அரசுப்பள்ளி மாணவர்களோடு கலந்துகொண்டு, பின் வாசிப்பின் முக்கியத்துவம் (Significants of Reading) எனும் தலைப்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது, 'சிலர் கோயிலில் இருப்பதை விரும்புவார்கள். சிலர் குடும்பத்தினருடன் இருப்பதை விரும்புவார்கள். நல்ல வாசகர்கள் புத்தகங்களுடன் இருப்பதை விரும்புவார்கள். எங்கள் திராவிட இயக்கம் எழுத்தின் மூலம் பல சாதனைகளை செய்துள்ளது. நூல்கள் சமூகத்தை மாற்றக்கூடியது.
அறிஞர் அண்ணாவின் 'சரோஜா ஆறணா' சிறுகதையும், எழுத்தாளர் இமையத்தின் 'கோவேறு கழுதைகள்' நாவலும் தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்திய இலக்கியங்கள். எங்கள் தமிழ்நாட்டின் எழுத்தாளர்கள் அனைவரின் பெயரையும் சொல்ல வேண்டுமென்றால் நேரம் போதாது. எழுத்தாளர்களை என்றும் போற்றக்குடியவர்கள் தமிழர்கள்.
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவிற்கு சார்ஜா வாசகர்கள் அனைவரும் வருகை தர வேண்டும்.
Just 10 to 15 minutes a day with a book is enough to spark your curious little one’s interest’ என்கிறது Unisef அமைப்பு. தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் வாசிக்க வேண்டும்.
UIS என சொல்லக்கூடிய Unesco institute for Statistics அமைப்பின் ஆய்வறிக்கை 617 மில்லியன் குழந்தைகளுக்கு அடிப்படை வாசிப்பும், கணித அறிவும் எட்டவில்லை என்கிறது. எனவே, குழந்தைகளுடன் இணைந்து வாசிக்க வேண்டும். “Govt Schools are not a sign of poverty. Govt schools are a sign of pride” எனப் பேசினார்.
எதிர்கால விண்வெளி தொழில்நுட்பங்கள், சுற்றுச்சூழல், உயிர் பொறியியல் உள்ளிட்டவை குறித்து காட்சிப்படுத்தி பிரமிப்பினை ஏற்படுத்தும் எதிர்கால அருங்காட்சியகத்தை மாணவர்களுடன் இணைந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார். மேலும், இந்தப் பயணம் தங்களுக்கு மிகுந்த அனுபவத்தையும், மகிழ்ச்சியையும் அளிப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பொறியியல் கலந்தாய்வில் 4ஆவது சுற்று முடிவில் 93,571 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு!