சென்னை அம்பத்தூர் காவல் நிலையம் அருகே சத்தியமூர்த்தி என்பவர் சொந்தமாக பால் ஏஜென்சி நடத்திவருகிறார். இன்று விற்பனைக்காக கடை முன் 50க்கும் மேற்பட்ட பால் ட்ரேக்களை அடுக்கி வைத்திருந்தார். அதனை எண்ணும்போது இரண்டு ட்ரேக்கள் குறைவதை கண்டறிந்தார்.
இதையடுத்து சந்தேகமடைந்த சத்தியமூர்த்தி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்தார். அதில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் இரண்டு ட்ரேவை தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
தொடர்ந்து, சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த இளைஞர்களைப் பிடித்து விசாரித்தபோது பால் திருடியதை ஒப்புக்கொண்டனர்.
பின்னர் இருவரையும் அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து, சத்தியமூர்த்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் பால் ட்ரேக்களை திருடியதை ஒப்புக்கொண்டதோடு, இதேபோல் ஒரு பகுதியில் உள்ள பால் ஏஜென்சி கடை முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றதையும் ஒப்புக்கொண்டனர்.
இதையும் படிங்க: உண்டியலுடன் மல்லுக்கட்டிய திருடன்: பணம் இல்லாததால் ஏமாற்றம்!