சென்னை: சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்று (மே 18) மாலை ஏர் ஏசியா பயணிகள் விமானம் 278 பயணிகளுடன் புறப்பட்டது. இந்த விமானம் நேற்று இரவு சென்னை வான்வெளியை கடந்து கொண்டு இருந்த போது விமானத்தில் பயணித்த இந்தோனேசியா நாட்டை சேர்ந்த புஹாரி DT ஜிண்டோ (64) என்பவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவர் வலி தாங்க முடியாமல் துடித்தார்.
இதையடுத்து விமான பணிப்பெண்கள், விமானிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விமானத்தை அருகே உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்க விமானிகள் முடிவு செய்தனர். அப்போது சென்னை விமான நிலையம் அருகில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமை விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை உடனடியாக தொடர்பு கொண்டு, நிலைமையை விளக்கினார். விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் டெல்லியில் உள்ள தலைமை கட்டுப்பாட்டு அறையோடு தொடர்பு கொண்டு நிலைமையை தெரிவித்தனர். அங்கிருந்து விமானத்தை உடனடியாக சென்னையில் தரையிறங்க அனுமதிப்பதோடு, பயணிக்கு தேவையான மருத்துவ உதவிகள் அனைத்தையும் செய்யும் படி அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து ஏர் ஏசியா விமானம் நேற்று நள்ளிரவு சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
விமான நிலைய மருத்துவக் குழுவினர் விமானத்துக்குள் சென்று பயணியை பரிசோதித்தனர். அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை இருப்பது தெரியவந்தது. ஆனால் அந்த பயணிக்கு இந்தியாவில் இறங்குவதற்கான விசா இல்லை. இதனால் அந்தப் பயணியை விமானத்தை விட்டு உடனடியாக கீழே இறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதை அறிந்த சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் மனிதாபிமான அடிப்படையில் இந்தோனேசிய நாட்டு பயணிக்கு அவசரகால மருத்துவ விசா வழங்கினர்.
அதன்பிறகு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கும் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே, ஏர் ஏசியா விமானி இந்தோனேசிய நாட்டுப் பயணி அவசர மருத்துவ சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் தகவலை இந்தோனேசியா நாட்டு தூதரகத்துக்கு முறைப்படி தெரியப்படுத்தினார். இதையடுத்து அந்த விமானம் 277 பயணிகளுடன் நேற்று நள்ளிரவு சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்றது.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் புதிய ரேபிட் எக்ஸிட் டாக்ஸி வேக்கள் செயலாக்கம்!