கரோனா இரண்டாம் அலை மிக தீவிரமாக உள்ள நிலையில், குஜராத் போன்ற வடமாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், தமிழ்நாட்டில் ரெம்டிசிவர் மருந்துகள் தனி நபர்களுக்கு வழங்கப்படுவதாகவும், ஆக்சிஜன் உற்பத்தி போதுமான அளவிற்கு உள்ள நிலையில், அதனை மாநில அரசின் அனுமதி பெறாமல் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதாகவும், வெண்டிலேட்டர் பற்றாக்குறை உள்ளதாகவும் தமிழ் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி இருந்தது.
இந்த செய்தியை அடிப்படையாக கொண்டு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தாமாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுத்தது. தமிழ்நாட்டில் ஆக்சிஜன் மற்றும் ரெம்டிசிவர் மருந்துகள் பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக இன்று காலை கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, மற்ற மாநிலங்களின் நிலை தமிழ்நாட்டிற்கு ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டே தற்போதைய நிலை குறித்து அறிய விரும்புவதாகத் தெரிவித்தார்.
தற்போதைய சூழலில் குழப்பம் ஏற்படுத்துவதற்காக இந்த வழக்கை தாமாக முன் வந்து எடுக்கவில்லை என்றும் நீதிபதி தெளிவுப்படுத்தினார். மேலும், இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு அரசிடம் விளக்கம் பெற்று, இன்று பிற்பகல் தெரிவிக்கும்படி அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணிடம் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.