சென்னை: தமிழக காவல்துறையின் தொழில்நுட்ப பிரிவில் 154 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்குக் கடந்த 2001ஆம் ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாகத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்குச் சட்டம், பணி விதிகள், கணிப்பொறி தொடர்பான பயிற்சிகள் முதல் மூன்று மாதங்களுக்கும், தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகள் அடுத்த மூன்று மாதங்களுக்கும் வழங்கப்பட்டன.
இரண்டு பயிற்சிகளுக்கும் தனித்தனியாகத் தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், சட்டம், பணி விதிகள் குறித்த பயிற்சிக்குப் பின் நடத்தப்பட்ட தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி மூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டது.
கடந்த 2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த பணி மூப்பு பட்டியலில், தொழில்நுட்ப பயிற்சிக்குப் பின் நடந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தங்களது பெயர், கடைசியில் இடம் பெற்றிருப்பதாகக் கூறி உதவி ஆய்வாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, தொழில்நுட்ப பயிற்சிக்குப் பின் நடத்தப்பட்ட தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மனுதாரர்களுக்கு உரியப் பணி மூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சட்டம், பணி விதிகள் தொடர்பான பயிற்சி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற உதவி ஆய்வாளர்கள் மேல்முறையீடு செய்திருந்தார்கள்.
கடந்த 2018ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அடங்கிய அமர்வு, இரண்டு தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணிமூப்பு பட்டியலைத் தயாரித்து, இரண்டு மாதங்களுக்குள் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: தென்மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது - முதலமைச்சர் ஸ்டாலின்