சென்னை: குற்ற வழக்கை மறைத்ததாகப் பயிற்சியின் போது காவலரைப் பணி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததோடு, சம்பந்தப்பட்ட நபருக்கு இரு வாரங்களில் மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை கீழ்பாக்கம் காவல்துறை குடியிருப்பில் வசிப்பவர் அரவிந்தராஜ். இவர், கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த 2ஆம் நிலை காவலர் பதவிக்கான தேர்வில் வெற்றி பெற்றார். 2013ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி பயிற்சிக்குச் சென்றார். இந்த இடைப்பட்ட காலத்தில் கீழ்பாக்கம் குடியிருப்பில் நின்ற காவல்துறை ஜீப்புக்கு தீ வைத்த வழக்கில் 3வது குற்றவாளியாக சேர்த்து கைது செய்யப்பட்டார்.
இதை மறைத்து அவர் காவல்துறை பயிற்சியில் கலந்து கொண்டதாக கூறி, அவரைப் பணிநீக்கம் செய்து ராஜபாளையம் 11வது பட்டாலியன் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதை எதிர்த்து அரவிந்தராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், 'காவல்துறை வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டதால், காவல்துறை குடியிருப்பில் வசிக்கும் சிலருக்கு ஏற்பட்ட பொறாமை காரணமாக, நடக்காத சம்பவம் தொடர்பான வழக்கில் தன் பெயரையும் சேர்த்து விட்டதாக கூறியுள்ளார்.
இந்த வழக்கில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என தன்னை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால், பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் பணி வழங்க உத்தரவிட வேண்டும்' என அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு (நவ.11) விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு காவலர் சார்பு பணி விதிகளின்படி, பயிற்சியில் இருக்கும் ஒருவரைப் பணிநீக்கம் செய்யும் முன்பு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்து, அவரது விளக்கத்தைப் பெற்ற பின்னரே இறுதி முடிவு எடுக்கவேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், மனுதாரர் விவகாரத்தில் அதுபோல விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கவில்லை. அவரது கருத்தையும் கேட்காதது, இயற்கை நீதிக்கு எதிரானது எனக் கூறி, பணிநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து, 2 வாரங்களில் மீண்டும் பணியில் சேர்த்து பயிற்சி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் சனாதனம் குறித்துப் பேச உரிமை உள்ளது - நீதிமன்றத்தில் ஆ.ராசா தரப்பு வாதம்!