சென்னை: வேலையில்லாத பொறியியல் பட்டதாரி மாணவர்களின் நிலையை மையமாக வைத்து கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் புகைபிடிக்கும் காட்சிகள் வரும் போது, தணிக்கை துறை அறிவுறுத்தலின் படி இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகங்கள் உரிய முறையில் இடம்பெறாததால், தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனம், நடிகர் தனுஷ் மற்றும் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோருக்கு எதிராக பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் நடிகர் தனுஷ் மற்றும் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யவும், புகார் மீதான விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் தனித் தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், இவர்கள் இருவரும் விசாரணைக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டது. இந்த மனுக்கள் நீதிபதி ஜி. சந்திரேகரன் முன்பு இன்று (மார்ச் 29) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் தனுஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் வழக்கை ரத்து செய்வது தொடர்பான வாதங்களை முன்வைத்தார். இதனை ஏற்ற நீதிபதி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள புகார் மீதான விசாரணைக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: குத்தகை பாக்கி ரூ.730.86 கோடியை 30 நாட்களில் கட்ட வேண்டும்.. ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு அதிரடி உத்தரவு..