சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தண்டிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதற்காக, விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நவ.21 ஆம் தேதி முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் ஆஜராக வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2021அம் ஆண்டு பிப்ரவரியில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்கு சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், விழுப்புரத்தில் உள்ள தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம், கடந்த ஜூன் 16ஆம் தேதி பிறப்பித்த தீர்ப்பில் ராஜேஷ்தாஸை குற்றவாளி என அறிவித்து, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்ததுடன், அவரது வாக்குமூலத்தை பதிவு செய்வது மற்றும் அவர் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களை தொடங்குவதற்காகவும் வழக்கின் விசாரணையை பலமுறை தள்ளிவைத்து வந்தது.
இதேபோல, அக்டோபர் 7ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோதும் அவகாசம் கேட்கப்பட்டதை ஏற்க மறுத்த விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம், ராஜேஷ்தாஸின் மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து தனது வாக்குமூலத்தை பதிவு செய்யவும், வழக்கறிஞர் வாதங்களை ஏற்கவும் உத்தரவிடக் கோரி ராஜேஷ்தாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவ நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு (நவ.14) விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேஷ்தாஸ் தரப்பில், சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்ததால் மூன்று வாரங்கள் முழு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதை சுட்டிக்காட்டி, மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நவம்பர் 21-ல் ஆஜராக தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதி நிர்மல்குமார், தனது மேல்முறையீடு வழக்கை தள்ளிவைக்கும்படி, பலமுறை ராஜேஷ்தாஸ் அவகாசம் கோரியிருந்தாலும், தற்போது இதய நோய் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பில் இருப்பதை, அவரது மருத்துவ அறிக்கைகள் உறுதிபடுத்துவதால், அவற்றை ஒதுக்கிவிட முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும், ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்துள்ளது ஒரு சட்டரீதியான மேல்முறையீடு என்பதை மறந்துவிட முடியாது என்றும், தனது வழக்கை திறம்பட எடுத்து செல்வதற்கு தனது வழக்கறிஞருக்கு அறிவுறுத்துவதற்கு அவருக்கு கால அவகாசம் தேவை என்றும், அந்த மனுவை விசாரிக்காமல் தீர்ப்பு தேதியை நிர்ணயித்தது முறையல்ல என கூறி விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து, மேல்முறையீட்டு மனு மீதான வாதங்களைத் தொடங்க, விழுப்புரத்தில் உள்ள முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நவ.21 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறும், 22ஆம் தேதி வாதங்களை முடிக்க வேண்டுமெனவும் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு நீதிபதி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தருமபுரி, கிருஷ்ணகிரி மக்கள் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு.. 2ஆம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!