சென்னை: வில்லோஸ் என்ற ஸ்பா நிறுவன உரிமையாளர் ஹேமாஜூவானி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னையில் பல இடங்களில் தங்களுக்கு மசாஜூடன் கூடிய அழகு நிலையங்கள் உள்ளது.
அவற்றில் அடிக்கடி காவல்துறையினர் சோதனை என்ற பெயரில் தொந்தரவு செய்கின்றனர். புகாரோ ஆதாரமோ இல்லாமல் காவல்துறையினர் தொந்தரவு செய்ய கூடாது என ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தநிலையில், தங்களது தாம்பரம் கிளையில், விபச்சாரம் நடைபெறுவதாக பொய் வழக்குப்பதிவு செய்வோம் என காவல்துறையினர் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நீதிபதி கண்டனம்
இந்த வழக்கு இன்று (அக்.26) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தாம்பரம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் நேரில் ஆஜராகி இந்த சம்பவத்திற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர்.
காவல்துறையினர் மசாஜ் நிலையங்களை விபச்சார நிலையம் என்ற கண்ணோட்டத்திலேயே பார்ப்பதாகவும், தங்களுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும் நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
மசாஜ் நிலையங்களில் விதிமீறல்கள் நடைபெறுவதாக புகார் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில் செயல்பட கூடாது என கூறி விசாரணையை நவம்பர் 12 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: ’அலுவல் ரீதியான கடிதத்தை சர்ச்சை ஆக்குதல் சரி அல்ல...’ - தலைமைச் செயலர் இறையன்பு